சிறிய தவறால் நிகழ்ந்த விபரீதம்... இந்த எளிய முறையை பின்பற்றினால் கார் கதவுகளை பாதுகாப்பாக திறக்கலாம்
மிகவும் பிஸியான சாலையில், கார் கதவை திடீரென திறந்ததால் விபரீதம் நிகழ்ந்தது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கார்கள் என்பது அறிவியல் கொடுத்த ஒரு வரம். எனவே அவற்றை நாம் முறையாக பயன்படுத்த வேண்டும். கார்களை பயன்படுத்த தொடங்கும் முன் தேவையான பயிற்சியை எடுத்து கொள்வது நல்லது. ஆனால் இந்தியாவில் பெரும்பாலானோர் அவ்வாறு செய்வது கிடையாது. இதன் காரணமாக காரின் கதவுகளை எப்படி திறக்க வேண்டும்? என்பது கூட பலருக்கும் தெரியாமல் போய் விடுகிறது.

காரின் கதவுகளை திறப்பது என்பது பார்ப்பதற்கு ஏதோ சிறிய விஷயம் போல் தெரியலாம். ஆனால் அதனை சரியாக செய்யாவிட்டால், அதன் விளைவுகள் மிகவும் அபாயகரமானதாக இருக்கும். நீங்கள் காரின் கதவை திடீரென திறந்தால், பின்னால் வந்து கொண்டிருக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கான ஆபத்து உள்ளது.

திடீரென திறக்கப்படும் கார் கதவில் மோதி அவர்கள் படுகாயம் அடையக்கூடும். இந்தியாவில் இவ்வாறான விபத்துக்கள் அடிக்கடி நடைபெற்று கொண்டேதான் உள்ளன. இந்தியா மட்டுமல்லாது நன்கு வளர்ந்த நாடுகளிலும் கூட இத்தகைய விபத்துக்கள் அரங்கேறவே செய்கின்றன. இந்த வரிசையில் வெளிநாடு ஒன்றில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு விபத்தின் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
இந்த வீடியோவை Pereeblo வெளியிட்டுள்ளது. மிகவும் பிஸியாக இருக்கும் சாலையில், கார் கதவை திடீரென திறப்பது எவ்வளவு அபாயகரமானது? என்பதை மேற்கண்ட வீடியோ நமக்கு விளக்குகிறது. அத்துடன் இந்த சிறிய தவறானது, கொடூரமான சாலை விபத்துக்களுக்கு எவ்வாறு வழிவகுக்கிறது? என்பதையும் இந்த வீடியோ மூலம் நாம் உணர்ந்து கொள்ளலாம். சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் மேற்கண்ட காட்சிகள் பதிவாகியிருந்தன.

இதன்படி பரபரப்பாக இயங்கி கொண்டிருந்த ஒரு சாலையின் ஓரத்தில், கார் ஒன்று பார்க்கிங் செய்யப்பட்டு இருந்தது. அதன் டிரைவர் காரின் கதவை திடீரென திறந்து விட்டார். இதனால் அப்போது அவ்வழியாக சைக்கிளில் வந்து கொண்டிருந்த ஒருவர், கார் கதவில் மோதி கீழே விழுந்தார். அதிர்ஷ்டவசமாக அவருக்கு பெரிய அளவில் அடிபடவில்லை. சிறிய அளவிலான காயங்களுடன் அவர் உயிர் தப்பி விட்டார்.

கார் கதவை எப்படி முறையாக திறக்க வேண்டும்? என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் போனதே இந்த விபத்திற்கு காரணம். காரின் கதவை திறக்கும் முன்பாக ரியர் வியூ மிரரை (Rear View Mirror) நம்மில் பெரும்பாலானோர் பார்ப்பது கிடையாது. இதன் காரணமாக பின்னால் வாகனங்கள் ஏதேனும் வருகிறதா? அல்லது பாதசாரிகள் யாரேனும் வருகிறார்களா? என்பது தெரியாமலேயே கதவை திறந்து விடுகிறோம்.

இதன் விளைவு விபத்தில் கொண்டு போய் விட்டு விடுகிறது. சாலையோரத்தில் நின்று கொண்டு காரின் கதவுகளை திடீரென திறப்பது ஒரு சில நாடுகளில் சட்ட விரோதம் ஆக்கப்பட்டுள்ளது. விபத்துக்களை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே இது தொடர்பாக மிக கடுமையான விதிமுறைகள் அங்கு அமலாக்கப்பட்டுள்ளன.

ஆனால் இந்தியாவில் அத்தகைய விதிமுறைகள் எதுவும் தற்போதைய நிலையில் கிடையாது. எனவே இது போன்ற விபத்துக்களை தவிர்ப்பது நமது கைகளில்தான் உள்ளது. இதற்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். பரபரப்பான சாலைகளில், காரின் கதவுகளை எவ்வாறு திறக்க வேண்டும்? என்பதை சரியாக தெரிந்து கொண்டால் மட்டும் போதும்.

யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் காரின் கதவுகளை திறக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால், 'டச் ரீச்' (Dutch Reach) முறையை கடைபிடிக்கலாம். டச் ரீச் என்பது ஒரு டெக்னீக். நெதர்லாந்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு டச் ரீச் டெக்னிக் சொல்லி தரப்படுகிறது. அது என்ன டச் ரீச் என யோசிக்கிறீர்களா? அது என்ன என்பதை இனி நாங்கள் உங்களுக்கு விளக்குகிறோம்.

பொதுவாக காரின் கதவுகள் நமது வலது அல்லது இடது கை பக்கங்களில் வழங்கப்பட்டிருக்கும். காரின் கதவு நமது வலது கை பக்கத்தில் இருந்தால், வலது கை மூலமாகவே கதவை திறப்போம். இடது கை பக்கத்தில் இருந்தால் இடது கை மூலமாகவே கதவை திறப்போம். ஆனால் டச் ரீச் டெக்னிக் படி இவ்வாறு செய்யக்கூடாது.

உதாரணத்திற்கு காரின் கதவு உங்கள் வலது கை பக்கத்தில் இருந்தால், கதவை திறக்க இடது கையை பயன்படுத்த வேண்டும். அதே சமயம் காரின் கதவு உங்கள் இடது கை பக்கத்தில் இருந்தால், கதவை திறக்க வலது கையை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் உடல் நன்கு திரும்பும். இதன் மூலம் கதவை திறக்கும் முன்பு சுற்றுப்புறத்தை நோட்டமிட வழி கிடைக்கும்.

குறிப்பாக உங்கள் உடல் திரும்புவதன் காரணமாக, பின்னால் வாகனங்கள் ஏதேனும் வந்தால் உங்கள் கண்களில் சிக்கி விடும். எனவே கதவை திறப்பதை உடனே தவிர்த்து விடலாம். டச் ரீச் டெக்னிக்கை விளக்கும் வீடியோவை Helpful DIY வெளியிட்டுள்ளது. அதனை நீங்கள் கீழே காணலாம்.
காரின் கதவுகளை திறக்க டச் ரீச் ஒரு பாதுகாப்பான டெக்னிக் ஆக பார்க்கப்படுகிறது. டச் ரீச் டெக்னிக்கை நீங்கள் பழக்கமாக்கி கொண்டால், சாலை விபத்துக்களை குறைக்க முடியும். எனவே டச் ரீச் டெக்னிக்கை வழக்கமாக்கி கொள்ள தற்போது முதலே முயற்சி செய்யுங்கள். மிகவும் எளிதான முறைதான் என்பதால், ஓரிரு நாட்களிலேயே அது உங்களுக்கு பழக்கமாகி விடும்.


Click it and Unblock the Notifications








