விரைவில் வரும் புதிய ஹூண்டாய் அவ்ரா காரின் எஞ்சின் விபரம் வெளியீடு!
விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய ஹூண்டாய் அவ்ரா செடான் காரின் எஞ்சின் விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் அவ்ரா என்ற புதிய காம்பேக்ட் செடான் காரை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த காரின் சாலை சோதனைகள் சமீபத்தில் துவங்கப்பட்டது. இந்த கார் எக்ஸ்சென்ட் காருக்கு மாற்றாக வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டு கார்களுமே தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என்று தெரிகிறது.

அதாவது, க்ராண்ட் ஐ10 மற்றும் ஐ10 நியோஸ் கார்களை போல இந்த இரண்டு கார் மாடல்களும் விற்பனையில் வைக்கப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த புதிய அவ்ரா செடான் கார் ஐ10 நியோஸ் காரின் அடிப்படையிலான செடான் வெர்ஷனாக இருக்கும்.
இந்த புதிய கார் விற்பனைக்கு வரும் வேளை நெருங்கி வரும் நிலையில், இந்த காரின் எஞ்சின் விபரங்களை ஹூண்டாய் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஹூண்டாய் எலீட் ஐ20 காரில் பயன்படுத்தப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், வெனியூ காரில் பயன்படுத்தப்படும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் க்ரெட்டாவில் இருக்கும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கின்றன.

இதில், அவ்ரா காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 83 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 120 பிஎச்பி பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் 90 பிஎச்பி பவரையும், 220 என்எம் டார்க் திறனையும் அளிக்க வல்லதாக இருக்கும். அனைத்து எஞ்சின்களும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக இருக்கும்.
இந்த மூன்று எஞ்சின் தேர்வுகளிலுமே 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படும். 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் மாடல்களில் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்படும். ஆனால், 1.0 லிட்டர் பெட்ரோல் மாடலில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு இடம்பெறாது.

ஹூண்டாய் ஐ10 நியோஸ் காரில் இருக்கும் அதே சிறப்பம்சங்களை இந்த புதிய அவ்ரா செடான் காரும் பெற்றிருக்கும். அதேநேரத்தில், சில மாறுதல்களும் செய்யப்பட்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஹூண்டாய் அவ்ரா செடான் கார் மிக விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ் உள்ளிட்ட காம்பேக்ட் செடான் கார் மார்க்கெட்டில் போட்டி போடும்.


Click it and Unblock the Notifications








