வெனியூ புண்ணியத்தில் பிரெஸ்ஸாவை வீழ்த்தி நம்பர்-1 இடத்தில் ஹூண்டாய் க்ரெட்டா !!
விற்பனையில் இந்தியாவின் நம்பர்-1 எஸ்யூவி என்ற பெருமையை ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி பெற்றிருக்கிறது.

எஸ்யூவி மார்க்கெட்டில் மிக கடுமையான போட்டி நிலவுகிறது. பல புதிய வரவுகள் சந்தைப் போட்டியை மிக மிக சவாலானதாக மாற்றி இருக்கிறது. இந்தியாவின் எஸ்யூவி மார்க்கெட்டில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிதான் நம்பர்-1 மாடலாக இருந்து வந்தது.

மேலும், விற்பனை யாரும் நினைத்து பார்த்திராத அளவுக்கு, உச்சத்தில் இருந்து வந்தது. இந்த நிலையில், மாருதி பிரெஸ்ஸா மார்க்கெட்டை குறிவைத்து களமிறக்கப்பட்ட புத்தம் புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.

இதுவரை எந்த ஒரு மாடலாலும் அசைத்து பார்க்க முடியாத அளவில் இருந்த மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவின் மார்க்கெட்டை ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி ஒரே மாதத்தில் உடைத்துக் காட்டி இருக்கிறது. மாருதி பிரெஸ்ஸாவின் விற்பனை கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 43.82 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.

கடந்த மே மாதம் 8,781 மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிகள் விற்பனையாகி இருக்கின்றன. அதேநேரத்தில், 9,054 ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிகள் விற்பனையாகி உள்ளன. இதனால், விற்பனையில் இந்தியாவின் நம்பர்-1 எஸ்யூவி மாடல் என்ற பெருமையை ஹூண்டாய் க்ரெட்டா பெற்றுள்ளது.

இரண்டாவது இடத்தில் மாருதி பிரெஸ்ஸா இருக்கும் நிலையில், மூன்றாவது இடத்தில் ஹூண்டாய் வெனியூ பிடித்துள்ளது. கடந்த மாதம் 7,049 ஹூண்டாய் வெனியூ எஸ்யூவிகள் விற்பனையாகி இருக்கின்றன.
இதில், மற்றொரு விஷயம் என்னவெனில், வரும் மாதங்களில் வெனியூ எஸ்யூவியின் விற்பனை அதிகரிக்கும் பட்சத்தில், பிரெஸ்ஸாவின் விற்பனை மேலும் வீழ்ச்சி அடைக்கூடும் என்று ஆட்டோமொபைல் துறையினர் கருத்து தெரிவிக்கின்றனர்.

நாட்டின் கார் விற்பனையில் பாதி அளவு பங்களிப்பை மாருதி சுஸுகி பெற்றிருக்கிறது. கடந்த ஜனவரி முதலே மாருதி சுஸுகியின் விற்பனையில் பெரும் தள்ளாட்டம் காணப்படுகிறது. அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

இந்த நிலையில், அந்நிறுவனத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கி வந்த விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் விற்பனை பாதி அளவு குறைந்திருப்பது மேலும் ஒரு இடியை அதன் தலையில் இறக்கி இருக்கிறது. மறுபுறத்தில், வெனியூ மூலமாக பல சாதகமான விஷயங்களை ஹூண்டாய் மோட்டார்ஸ் பெற்றிருக்கிறது.


Click it and Unblock the Notifications








