விற்பனையில் கலக்கும் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி... புதிய மைல்கல்லை எட்டியது!
உற்பத்தியில் 5 லட்சம் என்ற புதிய மைல்கல்லை எட்டி இருக்கிறது ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி கார். ஹூண்டாய் க்ரெட்டாவின் இந்த இமாலய வெற்றிக்கு அதன் மிடுக்கான தோற்றம்தான் முக்கிய காரணம்.
ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி கார் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளது. அதன் விபரங்களையும், இந்த சாதனைக்கான காரணங்களையும் பார்க்கலாம்.

சொகுசு கார்கள் போன்ற பகட்டான தோற்றம், சரியான பட்ஜெட்டில் கிடைக்கும் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி இந்தியர்களின் மனதில் கொள்ளையடித்துவிட்டது. இதனால், விற்பனையில் கொடி கட்டி பறந்து வருகிறது.

கடந்த 2015ம் ஆண்டு ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. கடந்த ஆண்டு மே மாதம் கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட புதிய மாடலும் அறிமுகமானது. இந்த நிலையில், வலுவான சந்தையை பெற்றுவிட்ட ஹூண்டாய் க்ரெட்டாவை குறிவைத்து பல புதிய மாடல்கள் களமிறக்கப்பட்டு வருகின்றன.

இருப்பினும், ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் மதிப்பும், பிரியமும் வாடிக்கையாளர் மத்தியில் கொஞ்சமும் குறையவில்லை என்பது, இதன் மாதாந்திர விற்பனை மூலமாக உணர்ந்து கொள்ளலாம். எஸ்யூவி மார்க்கெட்டில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவுக்கு அடுத்த இடத்தில் ஹூண்டாய் க்ரெட்டாதான் இருந்து வருகிறது.

இந்த நிலையில், சென்னையிலுள்ள ஹூண்டாய் ஆலையில் 5 லட்சம் க்ரெட்டா கார்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஹூண்டாய் க்ரெட்டா கார் புதிய மைல்கல்லை எட்டி இருக்கிறது ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி கார். உள்நாட்டில் மட்டும் 3.7 லட்சம் க்ரெட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஹூண்டாய் க்ரெட்டாவின் இந்த இமாலய வெற்றிக்கு அதன் மிடுக்கான தோற்றம்தான் முக்கிய காரணம். ஹூண்டாய் ஐ20 எலைட் காரை நாம் ஆணழகன் என்று குறிப்பிடுவதுண்டு. அந்த வரிசையில், எஸ்யூவி ரக கார்களில் ஆணழகனாக ஹூண்டாய் க்ரெட்டா காரை குறிப்பிடலாம்.

அடுத்து 5 பேர் செல்வதற்கான இடவசதியிலும் சிறப்பான கார். மேலும், ஹூண்டாய் கார் நிறுவனத்தின் வாரிசு என்பதை பிரதிபலிக்கும் விதத்தில் தரமான இன்டீரியர் பாகங்கள் மற்றும் நேர்த்தியான வடிவமைப்பும் வாடிக்கையாளர்களை தொடர்ந்து வசீகரித்து வருவதற்கான காரணங்கள்.

இந்த கார் வாடிக்கையாளர்களின் தேர்வுக்கு ஏற்ற வகையில் ஒரு பெட்ரோல் எஞ்சின் மற்றும் இரண்டு டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.6 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 121 பிஎச்பி பவரையும், 151 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பெட்ரோல் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

இந்த கார் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில், 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 219 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த டீசல் மாடல் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும்.

இந்த காரின் மற்றொரு 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 126 பிஎச்பி பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த மாடல் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

இந்த காரில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜர், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ஸ்மார்ட்வாட்ச் மூலமாக கட்டுப்படுத்தும் வசதி, 6 ஏர்பேக்குகள் என ஏராளமான தொழில்நுட்ப வசதிகள் உள்ளன.

ரூ.9.43 லட்சத்திலிருந்து ரூ.15.03 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது. ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி தனித்துவமான விலை ரகத்தில் நிலைநிறுத்தப்பட்டது. மஹிந்திரா எக்ஸ்யூவி500, நிஸான் கிக்ஸ், ரெனோ டஸ்ட்டர் மற்றும் டாடா ஹாரியர் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடுகிறது.


Click it and Unblock the Notifications