விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்!
ஹூண்டாய் எலான்ட்ரா காரின் இந்திய அறிமுகம் குறித்த புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

வடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாதத்திலேயே இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் தகவல்கள் உறுதி செய்கின்றன.

இந்த நிலையில், புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் முதலில் பெட்ரோல் மாடலில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரிய வந்துள்ளது. புதிய மாடலில் டீசல் எஞ்சின் தேர்வு இருக்காது என்றும் ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

அதாவது,இந்த ரகத்தில் விற்பனையில் உள்ள கார்களில் பெட்ரோல் மாடல்களையே வாடிக்கையாளர்கள் விரும்பி தேர்வு செய்வதால், இந்த முடிவை எடுத்துள்ளதாக ஹூண்டாய் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலக்கட்டத்தில் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட 214 எலான்ட்ரா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், வெறும் 90 டீசல் எலான்ட்ரா கார்கள் மட்டுமே இந்த காலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து, பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட எலான்ட்ராவை மட்டுமே விற்பனைக்கு கொண்டு வர ஹூண்டாய் முடிவு செய்துள்ளது. புதிய ஹூண்டாய் எலான்ட்ரா காகரில் தற்போது 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 150 பிஎச்பி பவரையும், 192 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சின் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படும்.

மறுபுறத்தில் டீசல் மாடலில் 1.6 லிட்டர் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 128 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். பெட்ரோல் எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு மேம்படுத்தப்படும் அதே நேரத்தில், இந்த 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் இனி தொடராது.

அண்மையில் கியா செல்டோஸ் காரில் இடம்பெற்றிருக்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினை பயன்படுத்த வாய்ப்புள்ளது. எனினும், சந்தையில் தேவை இருந்தால் மட்டுமே எலான்ட்ரா காரில் டீசல் எஞ்சின் தேர்வை பின்னர் வழங்கலாம் என்று ஹூண்டாய் முடிவு செய்துள்ளது.

புதிய ஹூண்டாய் எலான்ட்ரா காரில் புதிய ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், புதிய பனி விளக்குகள், புதிய அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த காரில் 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. புதிய லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி உள்ளிட்ட அம்சங்களும் இந்த காரை பிரிமீயமாக காட்டுகிறது.

புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் ரூ.14 லட்சம் முதல் ரூ.19 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹோண்டா சிவிக், ஸ்கோடா ஆக்டேவியா மற்றும் டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் ஆகிய மாடல்களுடன் போட்டி போடும்.


Click it and Unblock the Notifications