மிக குறைவான விலையில் களமிறங்கி தூள் கிளப்பும் ஹூண்டாய் கார்... வரவேற்பை வாரி வழங்கும் இந்திய மக்கள்
மிக குறைவான விலையில் களமிறங்கியுள்ள புதிய ஹூண்டாய் கார் தூள் கிளப்பி வருகிறது. இந்திய மக்கள் அதற்கு அமோக வரவேற்பை வாரி வழங்கி வருகின்றனர்.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஹூண்டாய் வெனியூ கார் கடந்த மே மாதம் 21ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் ஆகும்.

ஹூண்டாய் வெனியூ காரில், 1 லிட்டர் டர்போசார்ஜ்டு மூன்று சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 118 பிஎச்பி பவர் மற்றும் 172 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த கூடியது.

இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு ட்வின் கிளட்ச் ஆட்டோமெட்டிக் என மொத்தம் 2 கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதுதவிர மேலும் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களையும் ஹூண்டாய் வெனியூ கார் பெற்றுள்ளது.

இதன்படி 82 பிஎச்பி பவர், 114 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த கூடிய 1.2 லிட்டர் 4-சிலிண்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 89 பிஎச்பி பவர், 220 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 1.4 லிட்டர் 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் ஆப்ஷன்களும் வெனியூ காரில் வழங்கப்படுகின்றன.

இதில், பெட்ரோல் இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷனையும், டீசல் இன்ஜின் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் ஆப்ஷனையும் பெற்றுள்ளன. ஹூண்டாய் வெனியூ காரின் ஆரம்ப விலை 6.5 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) மட்டுமே.

இதன் காரணமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு ஒரு சில நாட்களே ஆகியுள்ள நிலையில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெனியூ காரை முன்பதிவு செய்து விட்டனர். இதுதவிர 1 லட்சத்திற்கு அதிகமான என்கொயரிகளும் ஹூண்டாய் வெனியூ காருக்கு வந்துள்ளன.

இவர்கள் காரை வாங்க சாத்தியமுள்ள வாடிக்கையாளர்களாக கருதப்படுகின்றனர். ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் ஒரு மாதத்திற்கு சராசரியாக 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வெனியூ கார்களை விற்பனை செய்ய வேண்டும் என திட்டமிட்டுள்ளது.

இந்த சூழலில் ஹூண்டாய் வெனியூ காரின் ஒட்டுமொத்த விற்பனையில் 40 சதவீத விற்பனை டர்போ பெட்ரோல் இன்ஜின் வேரியண்ட்கள் மூலமாக வரும் என எதிர்பார்ப்பதாக ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் மார்க்கெட்டிங் டிவிஷன் தலைவர் புனித் ஆனந்த் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து Autocar Professional தளம் செய்தி வெளியிட்டுள்ளது. மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 உள்ளிட்ட கார்களுடன் ஹூண்டாய் வெனியூ போட்டியிட்டு வருகிறது.

இதில், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா தவிர, இந்த செக்மெண்ட்டின் அனைத்து எஸ்யூவி கார்களிலும், டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. தற்போதைய நிலையில், டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின்கள் மிக வேகமாக பிரபலம் அடைந்து வருகின்றன.

வரும் ஆண்டுகளில், சப்-4 மீட்டர் ஹேட்ச்பேக் மற்றும் செடான் கார்களிலும் கூட, இத்தகைய இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், ஹூண்டாய் நிறுவனம் தனது பங்கிற்கு இரண்டாவது தலைமுறை கிராண்ட் ஐ10, எலைட் மற்றும் ஃபேஸ்லிஃப்ட் வெர்னா செடான் ஆகிய கார்களில், 1 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை வழங்க திட்டமிட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








