ஹூண்டாய் அயோனிக் எலெக்ட்ரிக் காரின் ஸ்பை படங்கள்!
ஹூண்டாய் அயோனிக் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் சாலை ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. ஸ்பை படங்களுடன் கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பேட்டரியில் இயங்கும் மின்சார கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு ஹூண்டாய் மும்முராக உள்ளது. முதலாவதாக, ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது. இந்த கார் சாலை சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டு இருப்பது குறித்த ஸ்பை படங்கள் வெளியாகின.

இந்த நிலையில், கடந்த ஆண்டு சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த ஹூண்டாய் அயோனிக் எலெக்ட்ரிக் காரும் இந்தியாவில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இந்தியன் ஆட்டோஸ் பிளாக் தளத்தில் சோதனை ஓட்டத்தின்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன.

அயோனிக் காரின் ஹைப்ரிட் மாடலில் இருந்து வேறுபடுத்தும் சில தனித்துவமான அம்சங்களை இந்த எலெக்ட்ரிக் மாடல் பெற்றிருக்கிறது. முன்புறத்தில் க்ரில் அமைப்பு, ஏர்டேம் அமைப்புகள் இல்லாமல் எலெக்ட்ரிக் மாடல் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

எல்இடி ஹெட்லைட்டுகள், புதிய அலாய் வீல்கள் உள்ளிட்ட பல தனித்துவமான அம்சங்களை இந்த அயோனிக் எலெக்ட்ரிக் கார் மாடல் பெற்றிருக்கிறது.

புதிய ஹூண்டாய் அயோனிக் காரில் 28 kWh லித்தியம் அயாான் பாலிமர் பேட்டரி பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இருக்கைகளுக்கு கீழாக இந்த பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும்போது 280 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

இந்த காரில் இருக்கும் மின் மோட்டார் அதிகபட்சமாக 120 பிஎச்பி பவரையும், 295 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். மணிக்கு 165 கிமீ வேகம் வரை செல்லும் திறன் பெற்றிருக்கிறது.

இந்த காரில் 6.6kW சார்ஜர் கொடுக்கப்படுகிறது. இந்த சார்ஜரை கொண்டு 4 மணிநேரத்தில் பேட்டரியை முழுமையாக சார்ஜ் ஏற்றிவிட முடியும். குயிக் சார்ஜர் பயன்படுத்தினால், 23 நிமிடங்களில் 80 சதவீத அளவுக்கு பேட்டரியை சார்ஜ் செய்துவிடலாம்.

முதலாவதாக கோனா எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்வதை ஹூண்டாய் உறுதி செய்துவிட்டது. இரண்டாவதாக இந்த மாடலை களமிறக்கும் நோக்கில், அயோனிக் காரை சாலை சோதனைகளுக்கு உட்படுத்தி ஆய்வுகளை ஹூண்டாய் மேற்கொண்டு வருவதாக கருதப்படுகிறது. எனினும், இன்னும் உறுதியான தகவல் இல்லை.


Click it and Unblock the Notifications








