கொடியசைத்து அனுப்பி வைத்த எடப்பாடி: பச்சை நிற பிளேட்டில் உரிமையாளரை வந்தடைந்த கோனா...
நமது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கிய வைத்த ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார், அதன் உரிமையாளரை வந்தடைந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஹூண்டாய் நிறுவனம், அதன் முதல் எலெக்ட்ரிக் காரை கடந்த ஜீலை மாதம் 9ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. கோனா என பெயரிடப்பட்டுள்ள அந்த காருக்கு இந்திய மதிப்பில், ரூ. 25.30 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எஸ்யூவி ரக காராகும்.

கடந்த ஜீலை மாதம் 19ம் தேதி வரையிலான நிலவரப்படி, கோனா எலெக்ட்ரிக் காருக்கு 120 புக்கிங்குகள் பெறப்பட்டுள்ளன. அதேபோன்று, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காரை வங்கும் நோக்கில் டெஸ்ட் டிரைவ் செய்திருப்பதாக கூறப்படுகின்றது.
இந்த எலெக்ட்ரிக் காரின் அனைத்து பாகங்களும் இறக்குமதி செய்யப்பட்டு, சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹீண்டாய் பிளாணட்டில்தான் அசெம்பிள் செய்யப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு கோனா எலெக்ட்ரிக் காரை டெலிவரி செய்ய தொடங்கி வைக்கும்விதமாக, கடந்த 24ம் தேதி நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொடியசைத்து மக்கள் பயன்பாட்டிற்காக வழியனுப்பி வைத்தார்.

தமிழக தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில், இந்த டெலிவரி தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஹூண்டாய் கோனா காரைப் பெற்ற முதல் இந்தியர் குறித்த தகவலும் கசிந்துள்ளது.

அந்தவகையில், ஹீண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரின் முதல் மாடல், மஹாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரத்தில் வசிக்கு ஓர் தொழிலதிபருக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலையும், புகைப்படத்தையும் ரஷ்லேன் ஆங்கில தளம் வெளியிட்டுள்ளது.
புகைப்படத்தில் காட்சியளிக்கும் கோனா எலெக்ட்ரிக் கார், பச்சை நிறத்திலான நம்பர் பிளேட்டுடன் காட்சியளிக்கின்றது.

ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த கோனா எலெக்ட்ரிக் காரில் 39.2KWh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 452 கிமீ வரை பயணிக்கலாம். அதேசமயம், இதனை 80 சதவீதம் சார்ஜ் செய்ய 60 நிமிடங்களே போதுமானது. இத்துடன், சாதராண கரண்ட் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்துகொள்ளும் வகையில், 2.8 kW திறன் கொண்ட சார்ஜர் வழங்கப்படுகின்றது.

இதனை பயன்படுத்தி மூன்று மணி நேரம் சார்ஜ் செய்தால், 50 கிமீ தூரம் பயணிப்பதற்கான சார்ஜை ஏற்றிக்கொள்ள உதவும். இந்த எலெக்ட்ரிக் கார் வெள்ளை, சில்வர், நீளம் மற்றும் கருப்பு ஆகிய நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கின்றது. இத்துடன் ட்யூவன் டோன் ஆப்ஷனாக மேற்கூரைக்கு கருப்பு நிறம் வழங்கப்படுகின்றது. இதனைப் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் பிரிமியம் தொகையாக ரூ. 20 ஆயிரம் செலுத்த வேண்டியுள்ளது.

இந்த எலெக்ட்ரிக் காரில் சிறப்பு வசதிகளாக, ஸ்பிளிட் செய்யப்பட்ட ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல் விளக்குகள், சன் ரூஃப், வென்டிலேட் செய்யக்கூடிய இருக்கைகள் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இவை, காருக்கு லக்சூரியஸ் மற்றும் சிறப்பான தோற்றத்தை வழங்க உதவும்.

இத்துடன், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதியுடன் கூடிய 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயிண்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், நவீன தொழில்நுட்ப வசதிகளாக ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல், கீலெஸ் என்ட்ரீ உள்ளிட்ட வசதிகள் கோனா எலக்ட்ரிக் காரில் இடம்பெற்றுள்ளது.

மேலும், பயணிகள் மற்றும் ஓட்டுநரின் பாதுகாப்பிற்காக 6 ஏர்பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், டிஸ்க் பிரேக்குகள், ஐசோ பிக்ஸ் சைல்ட் இருக்கை மவுண்டுகள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் ரியர் பார்க்கிங் கேமரா மற்றும் சென்சார் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளது.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரில் 100 kW திறன் கொண்ட மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது, 136 பிஎஸ் பவரையும், 395 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த எஸ்யூவி ரக கார் முன்பக்க வீல் டிரைவ் திறன் கொண்டதாக இருக்கின்றது. இது, சிங்கிள் ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைந்து இயங்குகின்றது.

அதேசமயம், இந்த எஞ்ஜின் 0த்தில் இருந்து 100 கிமீ என்ற வேகத்தை வெறும் 9.7 செகண்டுகளிலேயே தொட்டுவிடும் என கூறப்படுகின்றது. இத்துடன், இதில் நான்கு விதமான ரைடிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன. அவை, ஈகோ, ஈகோ ப்ளஸ், கம்ஃபோர்ட் மற்றும் ஸ்போர்ட் ஆகிய பெயர்களில் இயங்கும்.

இந்த கார் தற்போது இந்தியாவின் முக்கியமான 11 நகரங்களில் மட்டுமே விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளது. இதற்கு போட்டியாக விரைவில், எம்ஜி நிறுவனத்தின் இஇசட்எஸ் எலெக்ட்ரிக் இந்தியாவில் களமிறங்க உள்ளது.

பட்ஜெட் ரக வாகன விரும்பிகளின் எட்டா கனியாக வந்துள்ள இந்த காரின் விலை, மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி குறைப்பால் கணிசமாக குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி, ரூ. 1.5 லட்சம் வரை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனென்றால், மின்வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக அரசு குறைத்துள்ளது. இதுகுறித்த, அறிவிப்பை அந்நிறுவனம் விரைவில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








