ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் பெர்ஃபார்மென்ஸ் மாடல் அறிமுகம்!
ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் அதிசெயல்திறன் மிக்க மாடலானது பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோ மூலமாக பொது பார்வைக்கு வந்துள்ளது. படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

கடந்த மாதம் புதிய தலைமுறை ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதே கார் வெளிநாடுகளில் ஐ10 என்ற பெயரில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில், இந்த புதிய தலைமுறை க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் செயல்திறன் மிக்க மாடலை ஹூண்டாய் இன்று வெளியிட்டு இருக்கிறது.

ஜெர்மனியிலுள்ள பிராங்க்ஃபர்ட் நகரில் துவங்கி இருக்கும் சர்வதேச மோட்டார் ஷோ மூலமாக இந்த புதிய மாடலை வெளியிட்டு இருக்கிறது ஹூண்டாய் மோட்டார்ஸ். ஹூண்டாய் ஐ10 N-Line என்ற பெயரில் இந்த புதிய மாடல் வெளியிடப்பட்டு இருக்கிறது.

வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் பல்வேறு கூடுதல் சிறப்புகளுடன் சக்திவாய்ந்த எஞ்சினுடன் வந்துள்ளது. இந்த காரின் க்ரில் அமைப்பு, பம்பர் உள்ளிட்டவற்றில் சிவப்பு வண்ண அலங்காரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. க்ரில் அமைப்பில் என்-லைன் பேட்ஜ் மற்றும் எல்இடி விளக்கு பட்டைகளும் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

மிரட்டலான புதிய அலாய் வீல்கள், கருப்பு வண்ணத்திலான சைடு மிரர்கள் பின்புறத்தில் இரட்டைக் குழல் சைலென்சர் அமைப்பு ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாக கூறலாம்.

வெளிநாடுகளில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஹூண்டாய் ஐ10 என் லைன் மாடலில் 67 பிஎஸ் பவரையும்,, 96 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், ஐ10 என் லைன் மாடலில் இருக்கும் இதே எஞ்சின் 100 பிஎஸ் பவரையும், 171 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் விதத்தில் ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹூண்டாய் ஐ10 என் லைன் கார் மாடலில் 1.2 லிட்டர் 84 பிஎஸ் பவரையும், 118 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் மற்றொரு மாடலிலும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும். இரண்டு எஞ்சின்களிலுமே ஐட்லிங் ஸ்டார்ட் - ஸ்டாப் சிஸ்டம் கொடுக்கப்படுகிறது.

உட்புறத்தில் முழுவதும் கருப்பு வண்ண இன்டீரியர் தீம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஸ்டீயரிங் வீல், ஏசி வென்ட்டுகள், சென்ட்ரல் கன்சோல், கதவுகள், இருக்கைகளில் சிவப்பு வண்ண பாகங்கள் மூலமாக தனித்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த மாடலில் லேன் கீப் அசிஸ்ட், டிரைவர் அட்டென்ஷன் வார்னிங் சிஸ்டம், ஹை பீம் அசிஸ்ட், ரியர் வியூ கேமரா மற்றும் கொலிஷன் அவாய்டன்ஸ் அசிஸ்ட் ஆகியவையும் இடம்பெற்றுள்ளது. இந்த கார் கியா பிகான்டோ ஜிடி லைன் மற்றும் ஃபோக்ஸ்வேகன் அப்ப உள்ளிட்ட கார்களுடன் ஐரோப்பிய மார்க்கெட்டில் போட்டி போடும்.

இந்தியாவில் என் லைன் வரிசையில் விற்பனை செய்யப்படும் மாடல்களை அறிமுகம் செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்று ஹூண்டாய் மோட்டார்ஸ் ஏற்கனவே தெரிவித்துள்ளது. எனவே, சந்தையில் சாதகமான சூழல் ஏற்படும்போது இந்தியாவிலும் எதிர்பார்க்கலாம். இந்த காரின் விலை விபரம் வெளியிடப்படவில்லை.


Click it and Unblock the Notifications








