வென்யூ மாடலை அடுத்து ஹூண்டாய் களமிறக்கும் உங்கள் அபிமான கார் இது தான்!
ஹூண்டாய் நிறுவனம், புதிதாக அப்கிரேட் செய்யப்பட்ட கிராண்ட் ஐ10 காரை அறிமுகம் செய்ய, நல்ல நாளுக்காக காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஹூண்டாய் நிறுவனம் கிராண்ட் ஐ10 காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக திருவிழா காலத்தை எதிர்பார்த்துக் கொண்டுருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இது கிராண்ட் ஐ10-ன் மூன்றாம் தலைமுறை மாடல் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே மிகப்பெரிய நிறுவனங்களான, மாருதி மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் வருகின்ற மே மாதத்தில் அதன் புகழ்வாய்ந்த மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறி வருகின்ற நிலையில், ஹூண்டாய் நிறுவனமும் அதன் வென்யூ என்ற புதிய மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், பி-செக்மெண்ட் மாடலில் உருவாகியுள்ள ஹேட்ச்பேக் மாடலான கிராண்ட் ஐ10 காரையும் ஹீண்டாய் நிறுவனம் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிதாக அப்கிரேட் செய்யப்பட்டு உருவாகியிருக்கும் இந்த கிராண்ட் ஐ10 மாடலில் சில சிறப்பு வசதிகளை ஹூண்டாய் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

அந்தவகையில், இந்த காரின் முன்பக்க தோற்றமானது, ஹூண்டாய் நிறுவனத்தின் ஃபுளூடிக் டிசைனில் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, இதன் பக்கவாட்டு அமைப்பானது, எழுச்சியான பெல்ட்லைன் அமைப்பைப் பெற்றுள்ளது. பின்பக்க தோற்றமானது, மெல்லிய மற்றும் மிகவும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வடிவத்தில் காட்சியளிக்கிறது.

மேலும், இந்த காரின் உட்புறத்தில் தற்போதைய மாடலைக் காட்டிலும் கூடுதலான இட வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன், இந்த காரின் டேஷ்போர்டில் ஃப்ளோடிங் ரகத்திலான டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் ஏர்கிராஃப்ட் புரொபெல்லர் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து, காரின் உட்புறத்திற்கு டியூவல் டோன் ஃபினிஷிங் கொடுக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாயின் இந்த மூன்றாம் தலைமுறை ஹேட்ச்பேக் காரில் பாதுகாப்பு வசதிகளாக இரண்டு ஏர் பேக்குகள் முன்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளன. மேலும், ஈபிடி வசதியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் இணைக்கப்பட்டுள்ளது. இவற்றுடன், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், ஸ்பீட்-சென்சிட்டிவ் டூர் லாக்ஸ், கிராஷ்-சென்சிடிவ் டூர் அன்லாக், ஐசோபிக்ஸ் சைல்ட் இருக்கை மவுண்டுகள், ஹை ஸ்பீடு அலர்ட் மற்றும் முன்பக்க இருக்கை சீட் பெல்ட் எச்சரிக்கை ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த அப்கிரேட் செய்யப்பட்ட கிராண்ட் ஐ10 மாடலை ஹூண்டாய் நிருவனம் அதன் பிஏ பிளாட்பாரத்தில் வைத்து உருவாக்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த காரில் புதிதாக அமலுக்கு வரவிருக்கும் மாசு உமிழ்வு கட்டுப்பாட்டின் அடிப்படையில், பிஎஸ்6 தரத்திலான எஞ்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இது அறிமுகத்தின்பேதே உறுதி செய்யப்படும்.

ஹூண்டாய் நிறுவனத்தின் மிகவும் புகழ்வாய்ந்த மாடலாக கிராண்ட் ஐ10 இருந்து வருகிறது. இது, ஹேட்ச்பேக் ரகத்தில் அதிகம் விற்பனையாகும் கார்களில் இரண்டாம் இடத்தில் இருக்கின்றது. இதன் அறிமுக தேதியை ஹூண்டாய் நிறுவனம் கூடிய விரைவில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஓர் பண்டிகை திருநாளை எதிர்பார்த்துக்கொண்டுள்ளது ஹூண்டாய்.


Click it and Unblock the Notifications








