புதிய ஹூண்டாய் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட இந்திய வருகை விபரம்!
கூடுதல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ள புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் இந்திய வருகை விபரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்தியாவின் எக்ஸிகியூட்டிவ் செடான் கார் மார்க்கெட்டில் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக ஹூண்டாய் எலான்ட்ரா கார் பெயர் பெற்றுள்ளது. இந்த நிலையில், சந்தைப் போட்டி மற்றும் புதிய விதிமுறைகளுக்கு ஒப்பாக மேம்படுத்தப்பட்ட ஹூண்டாய் எலான்ட்ரா கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

வடிவமைப்பு மற்றும் வசதிகளில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வரும் இந்த புதிய எலான்ட்ரா கார் அடுத்த மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

புதிய ஹூண்டாய் எலான்ட்ரா காரில் முகப்பில் பிரம்மாண்ட க்ரில் அமைப்பு, முக்கோண வடிவிலான எல்இடி ஹெட்லைட்டுகள், வி வடிவிலான எல்இடி பகல்நேர விளக்குகள் இடம்பெற்றுள்ளன. பக்கவாட்டில் கூபே போன்ற பின்புறம் தாழ்ந்த கூரை அமைப்புடன் வடிவமைப்பு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த காரில் புதிய அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்டுகள், மறுவடிவமைப்பு பெற்ற பூட் ரூம் மூடி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பெற்றிருக்கிறது. மொத்தத்தில் வழக்கம்போல் மிக கவர்ச்சிகரமான எக்ஸிகியூட்டிவ் செடான் மாடலாக இருக்கிறது.

புதிய ஹூண்டாய் எலான்ட்ரா காரின் உட்புறத்திலும் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த காரில் 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும்.

இந்த காரில் புதிய 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல், இரட்டை குடுவை அமைப்புடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், மல்டி இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

புதிய எலான்ட்ரா காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் வர இருக்கிறது. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 150 பிஎச்பி பவரையும் 192 என்எம் டார்க் திறனையும், டீசல் எஞ்சின் 126 பிஎச்பி பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

புதிய எலான்ட்ரா காரின் எஞ்சின்கள் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக இருக்கும். தற்போதைய பெட்ரோல் மாடல் ரூ.13.82 லட்சம் ஆரம்ப விலையிலிருந்தும், டீசல் மாடல் ரூ.15.13 லட்சம் முதலும் கிடைக்கிறது. பிஎஸ்-6 மாடல் கூடுதல் விலையில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஹோண்டா சிவிக், டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் மற்றும் ஸ்கோடா ஆக்டேவியா கார்களுடன் போட்டி போடும்.
Source: ACI


Click it and Unblock the Notifications