இந்தியாவில் ஜெனிசிஸ் சொகுசு கார்களை அறிமுகப்படுத்துகிறது ஹூண்டாய்!
ஆடி, பென்ஸுக்கு போட்டியாக ஜெனிசிஸ் சொகுசு கார் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் தனது கீழ் செயல்படும் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

மேலும், ஜெனிசிஸ் என்ற பிராண்டின் கீழ் சொகுசு கார் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், சொகுசு கார்களுக்கான வரவேற்பு இந்தியாவில் அதிகரித்து வருவதை மனதில் வைத்து, ஜெனிசிஸ் பிராண்டை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளதாக லைவ் மிண்ட் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

டொயோட்டா நிறுவனத்தின் லெக்சஸ் சொகுசு கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. அந்த கார்களுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை ஹூண்டாய் உற்று நோக்கி வருகிறது. மேலும், வால்வோ உள்ளிட்ட சொகுசு கார் நிறுவனங்களும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்து வருகின்றன.

எனவே, தனது ஜெனிசிஸ் பிராண்டுக்கும் நிச்சயம் வரவேற்பு இருக்கும் என்பதுடன், இந்தியாவில் தனது வர்த்தக அனுபவத்தை வைத்து ஜெனிசிஸ் சொகுசு கார்களை எளிதாக சந்தைப்படுத்த முடியும் என்று அந்த நிறுவனம் நம்புகிறது.

வரும் 2020ம் ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் புதிய ஜெனிசிஸ் கார் மாடல்களை காட்சிப்படுத்தவும் ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. சர்வதேச அளவில் ஜெனிசிஸ் பிராண்டில் மூன்று செடான் ரக சொகுசு கார்களை ஹூண்டாய் விற்பனை செய்து வருகிறது.

இதில், ஜி70 மாடல்தான் விலை குறைவான ஜெனிசிஸ் சொகுசு கார். இந்த காரில் 249 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்ப்டடு இருக்கிறது. இதுதவிர்த்து, 360 பிஎச்பி பவரை அளிக்கும் 3.3 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனிலும் கிடைக்கிறது.

அடுத்ததாக ஜெனிசிஸ் ஜி80 செடான் காரில் வி6 மற்றும் வி8 எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதில், வி8 எஞ்சின் அதிகபட்சமாக 414 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. ஜெனிசிஸ் ஜி90 செடான் கார்தான் மிக விலை உயர்ந்த மாடலாக இருக்கிறது.

இந்த கார்கள் ஆடி, பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ், ஜாகுவார் உள்ளிட்ட நிறுவனங்களின் சொகுசு கார்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும். அடுத்த ஆண்டில் ஜெனிசிஸ் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கும் ஹூண்டாய் திட்டம் வைத்துள்ளது. ஆனால், டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்வையாளர்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து முடிவு எடுக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.


Click it and Unblock the Notifications








