கடுமையான சீதோஷ்ண நிலைகளில் ஹூண்டாய் வெனியூ கார் சோதனை ஓட்டம்!
விரைவில் அறிமுகமாக இருக்கும் புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி தற்போது கடுமையான சீதோஷ்ண நிலைகளில் வைத்து இறுதிக்கட்ட சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதனை டீசராகவும் வெளியிட்டு இருக்கிறது ஹூண்டாய் மோட்டார்ஸ்.

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்யூவி வெனியூ என்ற பெயரில் வரும் 17ந் தேதி பொது பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அடுத்த மாதம் 21ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

இந்த நிலையில், புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி இறுதிக் கட்ட சோதனை ஓட்டங்களில் வைக்கப்பட்டு இருப்பது குறித்த டீசர் வீடியோக்களை அந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது. தற்போது உத்தரகாண்ட் மாநிலம், நைனிட்டால் பகுதியில் உள்ள ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் வைத்து சோதனை ஓட்டம் செய்யப்பட்டுள்ளது.

இமயமலையில் உள்ள பனிப்பிரதேசமாக இருக்கும் அந்த பகுதியில் மைனஸ் 6 டிகிரி வெப்பநிலையில் வைத்து ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் செயல்பாடுகள் ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. கடல் மட்டத்திலிருந்து 7,000 அடி உயரத்தில் மலைப்பாங்கான சாலையில், மிக குறைவான வெப்பநிலையில் வெனியூ எஸ்யூவியின் செயல்திறன் எப்படி இருக்கிறது என்பதை முழுமையாக சோதித்துள்ளது ஹூண்டாய். அதனை டீசராகவும் வெளியிட்டு இருக்கிறது.

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் காம்பேக்ட் ரக எஸ்யூவியான வெனியூ 4 மீட்டருக்குள் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், புளூலிங்க் எனப்படும் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் இந்த கார் வர இருப்பதும் வாடிக்கையாளர்களை பெரும் எதிர்பார்ப்பில் மூழ்க செய்துள்ளது.

இந்த காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன் புதிதாக வழங்கப்பட இருக்கிறது. தவிரவும், 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களிலும் புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி வர இருக்கிறது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.
இந்த புதிய எஸ்யூவி மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஆகிய காம்பேக்ட் எஸ்யூவிகளுக்கு கடும் நெருக்கடியை தரும். ரூ.8 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








