புத்தம் புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் உருவரை படங்கள் வெளியீடு!
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் டிசைன் அம்சங்களை குறிக்கும் விதத்திலான அதிகாரப்பூர்வ உருவரை படங்கள் இன்று வெளியிடப்பட்டன. அந்த படங்கள் மற்றும் தகவல்களை பார்க்கலாம்.

வரும் 17ந் தேதி துவங்க அமெரிக்காவில் துவங்க இருக்கும் நியூயார்க் ஆட்டோ ஷோவில், புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி சர்வதேச அளவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த சூழலில், அடுத்த மாதம் 21ந் தேதி இந்த புத்தம் புதிய எஸ்யூவி இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஆகிய மாடல்களுக்கு நேரடி போட்டியாக வர இருக்கும் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவியின் தெளிவான படங்கள் இதுவரை வெளியாகவில்லை. பொதுவாக ஹூண்டாய் கார்கள் வடிவமைப்பு அழகாக இருக்கும் என்பதால், அதீத எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்தநிலையில், வாடிக்கையாளர்களின் ஆவலுக்கு தீணிப்போடும் விதத்தில், புதிய வெனியூ எஸ்யூவி எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்வதற்கான உருவரைப் படங்களை ஹூண்டாய் மோட்டார்ஸ் இன்று வெளியிட்டு இருக்கிறது.

முன்புறத்ததில் பிரம்மாண்ட க்ரில் அமைப்பு, பானட்டை ஒட்டி எல்இடி பகல்நேர விளக்குககள் மற்றும் இண்டிகேட்டர்கள், டாடா ஹாரியர் போன்று சற்று இறக்கமாக அமைக்கப்பட்டு இருக்கும் ஹெட்லைட்டுகள் என புதுமையான டிசைன் அம்சங்களுடன் கவர்கிறது. பக்கவாட்டில் பெரிய வீல் ஆர்ச்சுகள் மற்றும் புதிய அலாய் வீல்கள், பின்புறத்தில் சதுர வடிவிலான டெயில் லைட்டுகள் ஆகியவை வெளிப்புற டிசைன் அம்சங்களாக இருக்கின்றன.

உட்புறத்தை பொறுத்தவரையில், பெரிய டேப்லெட் போன்ற தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் ஐபோன்கள் போன்று இந்த சாதனம் இ-சிம் கார்டு தொழில்நுட்பத்துடன் வருகிறது.

அதாவது, இன்பில்ட் சிம் எனப்படும் இன்ஃபோடெயின்மென்ட் சாதனத்திலேயே சிம் கார்டு பொருத்தப்பட்டு இருக்கும். வேண்டும் மொபைல் நெட்வொர்க் நிறுவனத்திடமிருந்து இணைப்பை மட்டும் வாங்கிக் கொண்டு பயன்படுத்தலாம். தனியாக சிம் கார்டு வாங்கி பொருத்த வேண்டியதில்லை.

இந்த இ-சிம் கார்டு மூலமாக எளிதாக இணைய வசதியை பெற முடியும் என்பதால், ஏராளமான தொழில்நுட்ப வசதிகளை இந்த சாதனம் அளிக்கும். நேவிகேஷன், பொழுதுபோக்கு வசதிகள், அவசர கால உதவிகள் என பலதரப்பட்ட வசதிகளை இந்த சாதனம் அளிக்கும். மேலும், ரோட்டரி நாப் மூலமாக சாதனத்தை இயக்கும் வசதியும் இருப்பது தெரிய வருகிறது.

மேலும், ஸ்டோரேஜ் வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, டேஷ்போர்டிலேயே குடையை வைத்துக் கொள்வதற்கான வசதியும் வழங்கப்பட்டது. அதேபோன்று, சென்ட்ரல் கன்சோல் கீழ் பகுதியிலும் ஸ்டோரேஜ் அறைகள் உள்ளன. ஆட்டோமேட்டிக் மாடலில் பேடில் ஷிஃப்ட் வசதிகளும் இந்த ரகத்தில் முதல்முறையாக இடம்பெற இருக்கிறது.

புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் டியூவல் க்ளட்ச் மாடல் வர இருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. தவிரவும், 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களிலும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் பெரிய வரவேற்பை பெறும் எனறு தெரிகிறது. மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மாடல்களின் விற்பனையிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது.


Click it and Unblock the Notifications








