ஹூண்டாய் வெனியூ காரில் விரைவில் மைல்டு ஹைப்ரிட் மாடல்?
ஹூண்டாய் வெனியூ காரில் விரைவில் மைல்டு ஹைப்ரிட் தேர்வு வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கடந்த மே மாதம் 21ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி கார் இந்தியர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. அறிமுகம் செய்யப்பட்டது முதல் இதுவரை 50,000 முன்பதிவுகள் வரை குவித்து அசத்தி இருக்கிறது. இதுவரை 20,000 யூனிட்டுகள் வரை டெலிவிரி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஹூண்டாய் வெனியூ காருக்கு இந்த அளவுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததற்கு, நேர்த்தியான டிசைன், நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் சிறப்பான எஞ்சின் தேர்வுகளுடன் மிக சரியான விலையில் வந்ததே காரணம்.

புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி கார் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதில், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின்தான் சக்திவாய்ந்த தேர்வாக உள்ளது.

இதன் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 120 பிஎஸ் பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இந்த மாடலுக்குத்தான் அதிக வரவேற்பு இருந்து வருகிறது.

இந்த நிலையில், இந்த 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வில் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் கொடுக்கப்பட இருப்பதாக ஆட்டோமொபைல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய மாடலானது அதிக எரிபொருள் சிக்கனத்தை தர வல்லதாகவும், குறைவான மாசு உமிழ்வை வெளிப்படுத்தும் சிறப்பம்சத்தை வழங்கும்.

ஹூண்டாய் வெனியூ காரின் 1.0 லிட்டர் பெட்ரோல் மாடலில் 12V மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்ததை வழங்குவதற்கு ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. தற்போது இந்த 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் லிட்டருக்கு 18.27 கிமீ மைலேஜை வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் சேர்க்கப்படும்போது 20 முதல் 22 கிமீ மைலேஜ் வழங்க வல்லதாக இருக்கும். விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் மாருதி பிரெஸ்ஸா 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினின் மைல்டு ஹைப்ரிட் மாடலுக்கு இது போட்டியாக இருக்கும்.

இந்த புதிய மாடல் மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இது நிச்சயம் ஹூண்டாய் வெனியூ காரின் வரவேற்பை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Source:Gaadiwaadi


Click it and Unblock the Notifications








