முதல்முறையாக... ஹூண்டாய் வெனியூ காரின் தொழில்நுட்ப வசதிகளின் விபரம்!
எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் வருவது போன்றே, ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியிலும் கனெக்டட் கார் என்ற சிறப்பு தொழில்நுட்ப வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட இருக்கிறது. இந்த தொழில்நுட்பத்தின் மூலமாக பெறக்கூடிய வசதிகள் குறித்து ஹூண்டாய் மோட்டார்ஸ் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது. அதன் விபரங்களை காணலாம்.

ஹூண்டாய் வெனியூ காரில் புளூலிங்க் கனெக்ட்டிவிட்டி என்ற பெயரிலான இந்த தொழில்நுட்பம் மூலமாக 33 வசதிகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும். பாதுகாப்பு, பொழுதுபோக்கு, கார் இயக்கம் பற்றிய தகவல்களை ஒருங்கே வழங்கும் விதத்தில் இந்த புளூலிங்க் கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

பாதுகாப்பு
விபத்து உள்ளிட்ட அவசர சமயங்களில் தானியங்கி முறையில் அருகாமையிலுள்ள 108 உள்ளிட்ட அவசர உதவி மையங்களுக்கு தானியங்கி முறையில் தகவல் அனுப்பும் வசதி உள்ளது. அதாவது, ஃபோர்டு கார்களில் உள்ளது போன்ற அதே தொழில்நுட்ப வசதிதான் இது. மேலும், உட்புறத்தில் இருக்கும் ரியர் வியூ கண்ணாடி பகுதியில் இருக்கும் பட்டனை அழுத்தினால் நெருங்கி உறவினர் அல்லது நண்பர்களை உடனடியாக தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும், உதவி கோரவும் முடியும்.

சாலை அவசர உதவி
காரில் ஏதேனும் பிரச்னை, தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டால், ஹூண்டாய் கால் சென்டர் மூலமாக அருகிலுள்ள சர்வீஸ் சென்டர் அல்லது நடமாடும் உதவி மையங்கள் வாயிலாக உடனடியாக உதவியை பெறுவதற்கான வாய்ப்பையும் இந்த புளூலிங்க் கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பம் வழங்கும். மேலும், பதிவு செய்யப்பட்ட எண்களுக்கு உடனடியாக நிலைமை குறித்த குறுந்தகவல் அனுப்பும் வசதியும் உள்ளது.

கார் இயக்கம்
காரின் எஞ்சின் மற்றும் இதர தொழில்நுட்பங்கள் சரியான முறையில் இயங்குகிறதா என்பதை தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பையும் புளூலிங்க் கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பம் வழங்கும். கார் இயக்கம் மட்டுமின்றி, கார் திருடுபோவது குறித்த எச்சரிக்கை, கார் எந்த இடத்தில் செல்கிறது என்பதை மொபைல்போன் மூலமாக துல்லியமாக தெரிந்துகொள்வதற்கான வசதிகளை அளிக்கும். தவிரவும், கார் திருடுபோனது தெரிந்தால், ஹூண்டாய் சர்வீஸ் சென்டர் மூலமாக கார் இம்மொபைலைசர் கருவியை செயலிழக்க வைக்க முடியுமாம்.

ரிமோட் கன்ட்ரோல்
ஹூண்டாய் புளூலிங்க் மொபைல் அப்ளிகேஷனை பயன்படுத்தி, காரின் கதவுகளை திறப்பதற்கும், மூடுவதற்கும் முடியும். அத்துடன், காரின் ஹெட்லைட், ஹாரன் மற்றும் இண்டிகேட்டர்களையும் இயக்க முடியும். மேலும், 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலில் எஞ்சினை மொபைல் ஆப் மூலமாக ஸ்டார்ட் செய்வதற்கான வசதியுடன் வருகிறது. மேலும், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டத்தையும் இயக்க முடியும். விரும்பிய வெப்ப நிலையில் முன்கூட்டியே மாற்றி வைத்துக்கொண்டு சில நிமிடங்கள் கழித்து காரில் ஏற முடியும்.

அசத்தலான வசதி
புதிய ஹூண்டாய் வெனியூ காரில் எஞ்சின், கியர்பாக்ஸ் இயக்கம் குறித்து துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும். அத்துடன், ஏதேனும் தொழில்நுட்ப பிரச்னை ஏற்பட்டால் அதனை எஎளிதாக மொபைல் புளூலிங்க் அப்ளிகேஷன் மூலமாக தெரிந்துகொள்லலாம். மாதத்திற்கு ஒருமுறை காரின் இயக்கம் சரியாக இருக்கிறதா என்பது குறித்த ஆய்வு தரவுகளையும் பெற முடியும். ஓடிய தூரத்தின் அடிப்படையில், எஞ்சின் ஆயில் மாற்றுவதற்கான எச்சரிக்கையும் மொபைல்போன் மூலமாக வழங்கும்.

டிரைவிங் எப்படி?
தினசரி உங்களது ஒவ்வொரு பயணத்தின் தரவுகளையும் இந்த மொபைல் ஆப் வழங்கும். ஒவ்வொரு முறையும் நீங்கள் வாகனத்தை எவ்வாறு ஓட்டி உள்ளீர்கள் என்பது குறித்த தரவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும். இதன் அடிப்படையில் ஓட்டும் முறையிலும் கூடுதல் கவனம் செலுத்தி தவறுகளை சரிசெய்து கொள்ளும் வாய்ப்பு உண்டு.

நேவிகேஷன் வசதி
காரின் நேவிகேஷன் சிஸ்டத்தில் மொபைல்போன் அப்ளிகேஷன் மூலமாகவே கார் செல்லுமிடத்தை பதிவு செய்து கொள்ள முடியும். இதற்கான விசேஷ கால் சென்டர் மூலமாகவும் செல்லுமிடத்தை தேர்வு செய்து பதிவு செய்ய இயலும். இதற்காக, உட்புற ரியர் வியூ மிரரில் பிரத்யேக பட்டன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. செல்லுமிடம் குறித்து தகவல்களை உறவுகளுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

நிகழ்நேர தகவல்
கார் செல்லும் வழியில் இருக்கும் போக்குவரத்து நெரிசல் குறித்து நிகழ்நேர தகவல்ககளை பெற முடியும். நேவிகேஷன் நாட்காட்டியில் செல்லுமிடத்தை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளும் வசதியும் உள்ளது. கார் இருக்கும் இடம் குறித்த தகவலையும் உறவினர்கள் எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ ஃபென்சிங்
குறிப்பிட்ட பகுதியை விட்டு கார் வெளியே செல்ல இயலாத வகையில் ஜியோ ஃபென்சிங் வசதியை பயன்படுத்தி கட்டுப்படுத்த முடியும். திருடர்கள் காரை திருடிக் கொண்டு குறிப்பிட்ட பகுதியை விட்டு வெளியேற முடியாது. அதேபோன்று, பிள்ளைகளிடம் அல்லது நண்பர்களிடம் காரை கொடுக்கும்போது இது பயன்படும். குறிப்பிட்ட வேகத்திற்கு மிகாமல் கட்டுப்படுத்தும் வசதியையும் வழங்கும். கார் குறிப்பிட்ட வினாடிகளுக்கு மேல் நின்றுகொண்டிருக்கும்போது எஞ்சின் ஓடிக் கொண்டிருப்பது குறித்தும் எச்சரிக்கை தரும்.

வாய்ஸ் கமாண்ட் சிஸ்டம்
புதிய ஹூண்டாய் வெனியூ காரில் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட வாய்ஸ் கமாண்ட் சிஸ்டம் கொடுக்கப்பட இருக்கிறது. அதாவது, இந்தியர்களின் பேசும் முறையை எளிதாக புரிந்துகொண்டு பதில் அளிக்கும் அல்லது குறிப்பிட்ட செயலியை இயக்கும் விதத்தில் இந்த விசேஷ வாய்ஸ் கமாண்ட் சிஸ்டம் செயல்படும்.

கட்டணமில்லா சேவை
புதிய ஹூண்டாய் வெனியூ எ்ஸயூவியில் வோடஃபோன் நிறுவனத்தின் இ-சிம் கார்டு பொருத்தப்பட்டு வருகிறது. இதற்கு மூன்று ஆண்டுகளுக்கு கட்டணமில்லா சேவையை வழங்க இருக்கிறது ஹூண்டாய். இந்த புதிய புளூலிங்க் செயலியின் பயன்கள் குறித்து சிமுலேட்டர் மூலமாக செயல் விளக்கம் செய்து காண்பிக்கும் வசதி ஹூண்டாய் டீலர்களில் விரைவில் துவங்கப்பட இருக்கிறது.


Click it and Unblock the Notifications








