ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியில் டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அறிமுகமாகிறது!
ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியில் டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ரகத்தில் முதல்முறையாக டிசிடி கியர்பாக்ஸ் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்பட இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

அடுத்த மாதம் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தில் புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி கார் களமிறக்கப்பட இருக்கிறது. ஏற்கனவே, மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் போன்ற வலுவான போட்டியாளர்கள் உள்ள இந்த களத்தில் ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியும் களமிறங்க உள்ளது.

ஏற்கனவே, ஹூண்டாய் க்ரெட்டா வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்த மாடலாக இருப்பதால், ஹூண்டாய் வெனியூ மீதும் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இருப்பினும், வலுவான போட்டியாளர்கள் இருப்பதால், போட்டியாளர்களிடத்தில் இல்லாத பல கூடுதல் சிறப்பம்சங்களை இந்த எஸ்யூவியில் கொடுத்து அசத்த இருக்கிறது ஹூண்டாய்.

அதில், கனெக்டட் கார் என்ற நேரடி இணைய வசதி மூலமாக பல்வேறு வசதிகளை பெறும் சிறப்பு தொழில்நுட்பத்தை இந்த வெனியூ காரில் வழங்க இருக்கிறது ஹூண்டாய். இதுகுறித்து விரிவாகவே பார்த்துவிட்டோம்.

இந்த நிலையில், காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தில் ஏஎம்டி கியர்பாக்ஸ் மற்றும் சாதாரண ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் இருந்து வரும் நிலையில், வெனியூ எஸ்யூவியில் டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் (DCT) என்ற ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்பட இருக்கிறது.

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தொழில்நுட்பங்களில் டிசிடி கியர்பாக்ஸ் என்பது மிக விரைவான ஆக்சிலரேசனையும், கியர் மாற்றத்தின்போது அதிர்வுகள் என்ற பேச்சுக்கே இல்லாத வகையில் மிக சிறப்பான தொழில்நுட்பத்தை பெற்றது. எனவே, ஹூண்டாய் வெனியூ காரின் மதிப்பை இந்த டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு மேலும் கூட்டும்.

மேலும், ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியில் வழக்கமான எஞ்சின் ஆப்ஷன்கள் தவிர்த்து புத்தம் புதிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வும் வழங்கப்பட இருக்கிறது. இந்த எஞ்சினுடன்தான் புதிய டிசிடி கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. எனவே, ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியில் இந்த எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வு வாடிக்கையாளர்களிடத்தில் முதன்மை பெறும் வாய்ப்புள்ளது.

புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி கார் ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியைவிட விலை குறைவான ஹூண்டாய் எஸ்யூவி என்பதும் இதற்கு பெரிய சந்தை வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. மேலும், போட்டியாளர்களுக்கு கடும் போட்டியை தரும் ஆணித்தரமாக கூறலாம்.

இதே டிசிடி கியர்பாக்ஸை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கும் ஹூண்டாய் சப்ளை செய்ய இருக்கிறது. டாடா ஹாரியர் எஸ்யூவியில் இந்த டிசிடி கியர்பாக்ஸ் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
Source: Carandbike


Click it and Unblock the Notifications








