இந்தியன் கார் ஆப் தி இயர் 2020 விருதை பெற்ற ஹூண்டாய் வென்யூ...
2019 மே மாதத்தில் ஹூண்டாய் நிறுவனத்தில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட வென்யூ மாடல் இந்தியன் கார் ஆப் தி இயர் 2020 விருதை பெற்றுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

Image Courtesy: Sirish Chandran/Twitter
அறிமுகமானதில் இருந்து இந்திய சந்தையில் சிறந்த முறையில் விற்பனையாகி வரும் காராக ஹூண்டாய் வென்யூ கார் விளங்குகிறது. காம்பெக்ட் எஸ்யூவி பிரிவில் விற்பனையாகி வருகின்ற இந்த கார், இந்த கிரீடத்தை இந்தியன் கார் ஆப் தி இயர் 2019 விருதை பெற்ற மாருதி சுசுகி ஸ்விஃப்ட் மாடலிடம் இருந்து பெற்றுள்ளது.

வென்யூ காருக்கு இந்த விருது எளிதாக கிடைத்துவிட்டது என்று மட்டும் நினைக்க வேண்டாம். ஏனெனில் இதன் பிரிவில் மட்டும் 10 புதிய காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் அறிமுகமாகியுள்ளன. குறிப்பாக இந்த பிரிவில் உள்ள மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மாடலானது, தற்சமயம் இந்திய சந்தையில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதன் பிரிவில், எஸ்யூவி மாடலான கியா செல்டோஸையும் சேர்த்து, ரெனால்ட் ட்ரைபர், ஹோண்டா சிவிக், மாருதி சுசுகி எஸ்-பிரெஸ்ஸோ, எம்ஜி ஹெக்டர், மாருதி சுசுகி வேகன் ஆர், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ், நிஸான் கிக்ஸ், டாடா ஹெரியர் என பல முன்னணி நிறுவனங்களின் மாடல் கார்கள் உள்ளன.

மொத்த எஸ்யூவி பிரிவுகளையும் சேர்த்து, கியா செல்டோஸ், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மாடல்களுக்கு அடுத்து மூன்றாவது சிறந்த விற்பனை எஸ்யூவியாக ஹூண்டாய் வென்யூ கார் தான் உள்ளது.

வென்யூ மாடலுக்கான இந்தியன் கார் ஆப் தி இயர் 2020 விருதை ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவின் முதன்மை இயக்குனர் ப்ரையன் டோங் ஹூவி பார்க் அவர்களிடம் ஜேகே டயர் & இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சேர்மன்& எம்டி Dr.ரகுபதி சிங்கானியா வழங்கினார்.

இந்தியன் கார் ஆப் தி இயர் 2020 விருதுக்கான காரை தேர்ந்தெடுக்கும் குழுவில் இந்திய ஆட்டொமொபைல் துறையில் உள்ள அனுபவமிக்க 16 நபர்கள் இருந்தனர். இவர்கள் இந்த விருதுக்கான காரை பல வெவ்வேறான தொழிற்நுட்பங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்தனர். அதாவது விலை, தயாரிப்பு தரம், எரிபொருள் பயன்பாடு, பாதுகாப்பு, செயல்பாட்டு திறன், இந்திய சாலைகளுக்கு ஏற்ற தன்மை உள்ளிட்டவை இந்த அளவுருக்களில் அடங்கும்.

இந்தியன் கார் ஆப் தி இயர் விருதை பெற்ற ஹூண்டாய் வென்யூ மாடலை பற்றி கூற வேண்டுமென்றால், ஏற்கனவே கூறியதுபோல் இந்த மாடல் கடந்த மே மாதம் காம்பெக்ட் எஸ்யூவி பிரிவில் ரூ.6.50 லட்சம் ஆரம்ப விலையுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் டாப் வேரியண்ட்டின் விலை இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.11.10 லட்சத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இரு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என்ஜின் தேர்வுகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 82 பிஎச்பி பவரை 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வெளிப்படுத்தி வருகிறது. மற்றொரு பெட்ரோல் என்ஜின் தேர்வான 1.0 லிட்டர் டர்போ என்ஜின் 120 பிஎச்பி பவரை வெளிப்படுத்துகிறது. இந்த என்ஜினுடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

வென்யூ மாடலின் டீசல் வேரியண்ட்டில் 1.4 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜினானது 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் 90 பிஎச்பி பவரை வெளிப்படுத்துகிறது. இந்த என்ஜின் தேர்வுகளில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மட்டும் தான் புதியதாக வென்யூ காரில் வழங்கப்பட்டுள்ளது. மற்ற இரு என்ஜின் தேர்வுகளும் ஹூண்டாய் எலைட் ஐ20 மற்றும் க்ரெட்டா மாடல்களில் இருந்து கொடுக்கப்பட்டுள்ளது.

இந்திய மார்க்கெட்டில் காம்பெக்ட் எஸ்யூவி பிரிவில் சிறந்த விற்பனை மாடலாக விளங்கி வரும் வென்யூ, டிசைன், தொழிற்நுட்பம் என இரண்டிலும் மிகவும் அப்டேட்டாக உள்ளது. குறிப்பாக இதன் வெளிப்புற டிசைன் இந்திய வாடிக்கையாளர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

அறிமுகமான புதியதில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மாடலேயே விற்பனையில் முந்திய வென்யூ, இந்த இந்தியன் கார் ஆப் தி இயர் 2020 விருதை பெறுவதன் மூலமாக இனி வருங்காலங்களில் அதன் போட்டி மாடல்கள் அனைத்தையும் முந்தி முதலிடம் பிடிப்பதற்கும் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








