ஹூண்டாய் வெர்னா, எலைட் ஐ20 கார்களில் புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு?
ஹூண்டாய் வெர்னா, எலைட் ஐ20 கார்களில் புதிய எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

அடுத்த ஆண்டு பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. இதற்கு தக்கவாறு கார் எஞ்சின்களை மேம்படுத்தும் பணிகளில் அனைத்து கார் நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. சில நிறுவனங்கள் டர்போசார்ஜர் துணையுடன் இயங்கும் பெட்ரோல் எஞ்சின்களை பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளன.

இந்த நிலையில், ஹூண்டாய் நிறுவனம் தனது கார்களில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு ஒப்பான தரம் கொண்ட புதிய எஞ்சின் தேர்வுகளை அறிமுகம் செய்ய இருப்பதாக ஓவர்டிரைவ் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது ஹூண்டாய் வெர்னா காரில் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சினும், எலைட் ஐ20 காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினும் கொடுக்கப்படுகிறது.

இந்த நிலையில், ஹூண்டாய் வெனியூ காரில் இடம்பெற்றிருக்கும் புதிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினை வெர்னா, எலைட் ஐ20 கார்களில் வழங்குவதற்கு ஹூண்டாய் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

வெர்னா காரின் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 121 பிஎஎச்பி பவரையும்,, 153 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. அதேபோன்று, எலைட் ஐ20 காரில் பயன்படுத்தப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 84 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

இந்த நிலையில், வெனியூ காரில் உள்ள புதிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 120 பிஎச்பி பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

இந்த 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை வெர்னா காரில் கொடுக்க இயலும். எலைட் ஐ20 காரில் குறைவான சக்தியை வெளிப்படுத்தும் திறனுடன் ட்யூனிங் செய்து அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த எஞ்சின் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின் மற்றும் புதிய மாற்றங்களுடன் எலைட் ஐ20 காரையும், வெர்னா காரையும் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. விலையிலும் மாற்றங்கள் இருக்கும்.


Click it and Unblock the Notifications








