சூப்பர் அறிவிப்பு... மின்சார வாகன கடனுக்கான வட்டிக்கு வருமான வரிச் சலுகை!
டெல்லி: மின்சார வாகன விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக புதிய வருமான வரிச் சலுகை அறிவிப்பு மத்திய பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை குறைப்பதற்கான பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மறுபுறத்தில் மாற்று எரிபொருள் வாகனங்களின் விற்பனையை ஊக்குவிக்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றன.

அதன்படி, மின்சார வாகன விற்பனையை அதிகரிப்பதற்கான சிறப்பு மானிய திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. ஃபேம் -2 என்ற அந்த திட்டத்தின்படி, மின்சார வாகனங்களுக்கான விலையில் நேரடி மானியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், பல்வேறு விதிகளுக்கு உட்பட்டு அந்த மானியம் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் மின்சார வாகன விற்பனையை ஊக்குவிப்பதற்கான புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மின்சார வாகனங்களை கடனில் வாங்கும்போது, அதற்குரிய வட்டிக்கு வரிமான வரியில் ரூ.1.5 லட்சம் வரை வரிச் சலுகை அளிக்கப்படுகிறது.

அதாவது, வீட்டுக் கடனுக்கான வட்டியில் வருமான வரி விலக்கு கொடுக்கப்படுவதுபோன்றே, மின்சார வாகன கடனுக்கான வட்டிக்கும் விலக்கு பெறும் வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பெற முடியும். இது நிச்சயம் சிறந்த திட்டமாக இருக்கும் என்பதுடன், வருமான வரி விலக்கு பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடுவோர், மின்சார வாகனங்களை வாங்குவதற்கான வாய்ப்பை பெற முடியும்.

அதேநேரத்தில், இது அதிகபட்சமாக ரூ.1.5 லட்சமாக இருந்தாலும், இருசக்கர வாகனங்களை வாங்குவோருக்கு ஓரளவு வரிச் சலுகை பெற முடியும்.. ஆனால், மின்சார கார்களை கடனில் வாங்குவோருக்கு இது சிறந்த பயனை வழங்கும். ஆனால், மின்சார கார் விற்பனையானது தற்போது டாக்சி மார்க்கெட் மற்றும் அரசுத் துறையை மட்டுமே குறிவைத்து விற்பனை செய்யப்படுகிறது.

மஹிந்திரா வெரிட்டோ கார் குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே கிடைப்பதும், அங்குள்ளவர்கள் மட்டுமே இந்த வரிச் சலுகை பெறும் வாய்ப்புள்ளது. ஹூண்டாய் கோனா, எம்ஜி இஇசட்எஸ் ஆகிய மின்சார கார்கள் தனி நபர் மார்க்கெட்டை குறிவைத்து குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

எனினும், வரும் காலத்தில் மின்சார கார்களை வாங்குவோருக்கு இந்த புதிய வருமான வரி விலக்கு திட்டம் சிறந்த பயனை வழங்கும் என்று எதிர்பார்க்கலாம். மேலும், விலை அதிகம் இருந்தாலும், வரிச் சலுகை பெறும் வாய்ப்பு இருப்பதால் சிறந்த மின்சார கார்களை நடுத்தர வருவாய் பிரிவினர் வாங்குவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும்.

ஏற்கனவே, மின்சார கார்கள் மீதான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது வருமான வரிச் சலுகை திட்டமும் மின்சார வாகன விற்பனையை ஊக்ககுவிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில், பெட்ரோல், டீசல் மீதான இறக்குமதி வரி ஒரு ரூபாய் அதிகரிக்கப்படுவதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வாகன உரிமையாளர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்பதுடன், அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும்.


Click it and Unblock the Notifications