ஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ் எஸ்யூவியின் இந்திய மாடல் குறித்த விபரம்
இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய ஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ் எஸ்யூவி குறித்த சில முக்கிய விபரங்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்தியாவில் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தில் பல புதிய மாடல்கள் தொடர்ந்து களமிறங்கி வருகின்றன. அந்த வகையில், ஃபோக்ஸ்வேகன் நிறுவனமும் இந்த ரகத்தில் புத்தம் புதிய மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி, வெளிநாடுகளுக்கான ஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ் மாடலிலிருந்து இந்தியாவிற்கான மாடல் மாறுதல் செய்யப்பட்டு இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது. வெளிநாட்டு மாடலைவிட இந்திய மாடல் அளவில் பெரிதாக இருக்கும் என்பதும் தெரிய வந்துள்ளது.

வெளிநாடுகளுக்கான மாடல் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் MQB A0 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், இந்திய வெர்ஷனானது MQB A0 IN என்ற இந்தியாவிற்கான பிரத்யேக கட்டமைப்பு கொள்கையில் உருவாக்கப்பட இருக்கிறது.

புதிய ஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ்ஸ எஸ்யூவியானது வெளிநாட்டு மாடலைவிட 10 மிமீ கூடுதல் வீல் பேஸ் கொண்டதாக இருக்கும். அதாவது, இந்திய மாடல் 2,651 மிமீ வீல் பேஸ் நீளத்தை பெற்றிருக்கும். அதேபோன்று, 100 மிமீ வரை உயரம் அதிகமாக இருக்கும்.

இந்த இரு முக்கிய மாற்றங்கள் காரணமாக, இந்தியாவில் விற்பனைக்கு வரும் மாடலில் உட்புற இடவசதி மிகச் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கூடுதல் வீல் பேஸ் நீளம் கொண்டதாக இருப்பதால் பின்புற கதவுகள் அளவு பெரிதாக மாறுகிறது. இதனால், ஏறி, இறங்குவதற்கும் சிறப்பாக இருக்கும்.

புதிய ஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ் எஸ்யூவியின் கிரவுண்ட் க்ளியரன்ஸ் 205 மிமீ ஆக அதிகரிக்கப்பட இருக்கிறது. இது இந்திய சாலை நிலைகளை எளிதாக எதிர்கொள்ள உதவும். பாடி ரோல் குறைவாக இருக்கும் விதத்தில் பின்புறத்தில் வலிமையான ஆன்ட்டி ரோல் அமைப்பும் கொடுக்கப்பட இருக்கிறது.

இந்தியாவில் 113 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 128 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் டீசல் எஞ்சின் ஆப்ஷனை கைவிடுவதற்கு ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது. எனவே, இந்த எஸ்யூவியில் டீசல் ஆப்ஷன் வருவதில் சந்தேகம் நிலவுகிறது.

டீசல் எஞ்சின் இல்லாத குறையை தீர்ப்பதற்காக சிஎன்ஜி ஆப்ஷனிலும் இந்த எஸ்யூவியை களமிறக்கும் திட்டம் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திடம் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஹைப்ரிட் மாடலை களமிறக்குவதற்கான பரிசீலனையும் உள்ளது.

வரும் 2021ம் ஆண்டு இந்த புதிய எஸ்யூவி மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.
Source:ACI


Click it and Unblock the Notifications








