இந்தியச் சாலையை கலக்க களமிறங்கியது டெஸ்லாவின் முதல் தானியங்கி கார்!
டெஸ்லாவின் தானியங்கி கார்கள் இந்தியாவில் தற்போதுவரை விற்பனைக்கு வராதநிலையில், பல லட்சம் செலவு செய்து இந்தியர் ஒருவர் மாடல் எஸ் காரை இறக்குமதி செய்துள்ளார்.

அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் டெஸ்லா நிறுவனம், தானாக இயங்கும் மின்சார கார்களைத் தயாரித்து விற்பனைச் செய்து வருகிறது. ஆட்டோ மொபைல்ஸ் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய இந்த நிறுவனம், பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட சொகுசு கார் நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியைக் கொடுத்து வருகிறது.

இதைத்தொடர்ந்து, கார்களின் சந்தையாக அதிகவேகமாக வளர்ந்து வரும் இந்தியாவிலும் தனது தயாரிப்புகளை விற்பனைக்குக் கொண்டுவர டெஸ்லா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கு கடந்த ஆண்டே இந்த நிறுவனம் முயற்சி மேற்கொண்டது. ஆனால், இந்தியாவில் மின்சார கார்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் போதுமான அளவு இல்லாததாலும், போதிய ஊக்குவிப்பு திட்டங்கள் இல்லாத காரணத்தாலும் டெஸ்லா நிறுவனம் தனது திட்டத்தில் இருந்து பின் வாங்கியது.

இந்த நிலையில், இந்தியாவைச் சேர்ந்த சுபம் ரவி என்பவர் டுவிட்டர் மூலம் டெஸ்லா நிறுவனத்தின் எலன் முஸ்க்கிடம், டெஸ்லா கார்கள் இந்தியாவில் விற்பனைச் செய்யப்படுவது குறித்த கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த எலன் முஸ்க், "நடப்பாண்டின் இறுதிக்குள் தங்களின் விற்பனையை இந்தியாவில் தொடங்குவோம்" என தெரிவித்தார். அவ்வாறு இல்லையெனில், அடுத்த ஆண்டிற்குள் நிச்சயமாக வர்த்தகத்தை டெஸ்லா தொடங்கும் என உறுதிக் கொடுத்தார். ஆகையால், டெஸ்லா நிறுவனத்தின் தானியங்கி மின் கார்கள் 2019 அல்லது 2020ம் ஆண்டிற்குள் இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மஹராஷ்டிரா மாநிலத்தின் மும்பையில் உள்ள தொழிலதிபர் ஒருவர், டெஸ்லாவின் மாடல் எஸ் காரை வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நீள நிறத்தில் இருக்கும் அந்த காரை டார்டா டோவிங் என்னும் கார் டெலிவரி நிறுவனம், மாடல் எஸ் காரை ஏற்றிச்செல்லும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதனை, 'ஆட்டோமொபிலி ஏர்டெண்ட்' அதன் முகப்புத்தக பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

டெஸ்லாவின் மாடல் எஸ் கார் செடான் ரகத்தில் நாட்ச்பேக் அல்லது உயர்த்தப்பட்ட பின்பக்க வடிவத்தைக் கொண்டதாக இருக்கின்றது. இது லாங் ரேஞ்ச் மற்றும் பெர்ஃபார்மன்ஸ் என்ற இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கின்றது. அவ்வாறு இந்த பெர்ஃபார்மன்ஸ் வேரியண்டில் வாடிக்கையாளர்கள் தங்களின் தேவைக்கேற்ப லுடிக்ரூஸ் மோடைத் தேர்வு செய்து கொள்ளலாம். இது 0-100 கிமீ வேகத்தை 2.4 நொடிகளில் தொடுவதற்கு உதவும். இந்த கார் சாதரணமாகவே 3 நொடிகளில் 0-100 கிமீ வேகத்தைத் தொடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் முதல் முறையாக வந்திருக்கும் இந்த மாடல் எஸ் காரானது, பெர்ஃபார்மன்ஸ் வேரியண்டின் பி100டி ரகம் எனக் கூறப்படுகிறது. ஆனால், இந்த தகவல் அதனை வாங்கிய உரிமையாளர் மூலம் பெறப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

டெஸ்லா நிறுவனம் இதுவரை ஐந்து மாடல்களை விற்பனைக்காக அறிமுகம் செய்துள்ளது. அதில், மாடல் எஸ் தான் இந்தியாவிற்கு முதல் முறையாக வந்துள்ளது. மாடல் எஸ்-இன் லாங் ரேஞ்ச் வேரியண்ட் காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 540 கிமீ தூரம் செல்லும். அதேபோன்று, பெர்ஃபார்மன்ஸ் வேரியண்டை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 506 கிமீ தூரம் செல்லும். இந்த இரண்டு வேரியண்ட்களும் மணிக்கு 249 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டவை.

டெஸ்லாவின் மாடல் எஸ் கார் இந்திய மதிப்பில் 59 லட்சம் என்ற தொடக்க விலையில் விற்பனையாகி வருகின்றது. அதன் உச்சகட்ட வேரியண்டின் விலை 68 லட்சமாகும். ஆனால், இந்த காரை டெஸ்லா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டுவராத காரணத்தால், இதனை இந்தியாவிற்கு கொண்டுவர அதன் உரிமையாளர் பலமடங்கு அதிகபடியானத் தொகையை கொடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது. அவ்வாறு, ஏற்றுமதி வரி, இறக்குமதி வரி உள்ளிட்ட தொகைகள் கூடுதல் காரின் மதிப்பிற்கு இணையாக இருக்கும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








