க்ளான்ஸா வந்த நேரம்... இந்தியாவின் 4வது பெரிய கார் நிறுவனமாக உயர்ந்த டொயோட்டா!
சந்தை பங்களிப்பு அடிப்படையில் இந்தியாவின் டாப் -14 கார் நிறுவனங்களின் பட்டியல் வெளியாகி இருக்கிறது. இதில், குறிப்பிடத்தக்க மாற்றமாக டாடா மோட்டார்ஸ், ஹோண்டா கார் நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் நான்காவது பெரிய கார் நிறுவனம் என்ற அந்தஸ்தை டொயோட்டா பெற்றிருக்கிறது.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்திய சந்தையில் கார் நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் முதல் கார் விற்பனையில் தொடர்ந்து கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த செப்டம்பரிலும் சரிவு இருந்தாலும், சற்றே மீளக்கூடிய வாய்ப்பை கார் நிறுவனங்களுக்கு வழங்கி இருக்கிறது.

இந்த நிலையில், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டு காலத்தில் சந்தைப் பங்களிப்பு அடிப்படையில் முன்னிலை பெற்றிருக்கும் கார் நிறுவனங்களின் பட்டியல் வெளியாகி இருக்கிறது. அதில், முதல் மூன்று இடங்களில் பெரிய மாற்றங்கள் இல்லை. ஆனால், டொயோட்டா நிறுவனம் அதிரடியாக இரண்டு இடங்கள் முன்னேறி 4-ம் இடத்தை பிடித்துள்ளது.

01. மாருதி சுஸுகி
நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டு காலத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் 50.20 சதவீத பங்களிப்புடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. அதாவது, சரியாக பாதி அளவு சந்தைப் பங்களிப்பை தொடர்ந்து தக்க வைத்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 52.82 சதவீதமாக இருந்த சந்தைப் பங்களிப்பை சற்றே குறைந்திருப்பது தெரிய வருகிறது.

02. ஹூண்டாய் மோட்டார்ஸ்
அடுத்ததாக, ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய கார் சந்தையில் 18.49 சதவீத பங்களிப்பை பெற்றிருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் முதல் அரையாண்டு காலத்தில் 15.94 சதவீதமாக இருந்த பங்களிப்பு இப்போது இரண்டரை சதவீதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது.

03. மஹிந்திரா
மூன்றாவது இடத்தில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா உள்ளது. கடந்த நிதி ஆண்டின் முதல் அரையாண்டு காலத்தில் 6.53 சதவீதமாக இருந்த சந்தைப் பங்களிப்பு இப்போது 7.52 சதவீதமாக உயர்ந்துள்ளது. விற்பனையில் குறைவு இருந்தாலும், சந்தைப் பங்களிப்பில் தொடர்ந்து மூன்Kராவது இடத்தை தக்க வைத்து வருகிறது.

04. டொயோட்டா
நான்காவது இடத்தில் இருந்த டாடா மோட்டார்ஸ் மற்றும் ஐந்தாவது இடத்தில் இருந்த ஹோண்டா கார் நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி டொயோட்டா கார் நிறுவனம் இரண்டு இடங்கள் முன்னேறி நான்காவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த நிதி ஆண்டின் முதல் அரையாண்டு காலத்தில் 4.63 சதவீதமாக இருந்த டொயோட்டா நிறுவனத்தின் சந்தைப் பங்களிப்பு 4.86 சதவீதமாக அதிகரித்துள்ளது. க்ளான்ஸா காரின் வருகையால் டாடா மோட்டார்ஸை சிறிய வித்தியாசத்தில் பின்னுக்குத் தள்ளி நான்காம் இடத்தை பிடித்துள்ளது. அதேநேரத்தில், டொயோட்டா கார் விற்பனை தொடர்ந்து சரிவு முகத்திலே இருந்து வருகிறது.

05. டாடா மோட்டார்ஸ்
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நான்காவது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு இறங்கிவிட்டது. இந்திய சந்தையில் கார் விற்பனையில் அதிக வீழ்ச்சியை சந்தித்து வரும் நிறுவனமாகவும் டாடா மோட்டார்ஸ் இருந்து வருகிறது. கடந்த நிதி ஆண்டின் முதல் அரையாண்டு காலத்தில் 6.21 சதவீதமாக இருந்த சந்தைப் பங்களிப்பு நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டு காலத்தில் 4.75 சதவீதம் என்ற அளவுக்கு கணிசமாக குறைந்துவிட்டது. டாடா டியாகோ, டிகோர், நெக்ஸான், ஹாரியர் உள்ளிட்ட முன்னணி கார் மாடல்களின் விற்பனை போட்டியாளர்களால் கணிசமாக சரிந்துவிட்டதே இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

06. ஹோண்டா கார்ஸ்
ஆறாவது இடத்தில் ஹோண்டா கார் நிறுவனம் உள்ளது. கடந்த நிதி ஆண்டின் முதல் அரையாண்டு காலத்தில் 5.49 சதவீதமாக இருந்த இந்நிறுவனத்தின் சந்தைப் பங்களிப்பு நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டு காலத்தில் 4.60 சதவீதமாக குறைந்துவிட்டது. டாடா போலவே, கடும் சந்தைப் போட்டியால் ஹோண்டா தள்ளாடுகிறது. இந்த நிலையில், சில மாதங்களில் புதிய ஹோண்டா சிட்டி வருகை இந்த நிறுவனத்தின் விற்பனைக்கு உத்வேகம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

07. ஃபோர்டு இந்தியா
ஃபோர்டு இந்தியா நிறுவனம் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த நிதி ஆண்டின் முதல் அரையாண்டு காலத்தில் 2.85 சதவீதமாக இருந்த சந்தைப் பங்களிப்பு இப்போது 2.69 சதவீதமாக குறைந்துவிட்டது. இந்திய சந்தையில் மிக நீண்ட காலமாக இருந்து வரும் ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் வர்த்தகத்திற்கு இந்த சந்தைப் பங்களிப்பு போதுமானதாக இல்லை. இந்திய சந்தையில் முக்கிய இடத்தை பிடிக்கும் விதத்தில், மஹிந்திராவின் கட்டுப்பாட்டில் ஃபோர்டு இந்தியா நிறுவனம் செல்ல இருக்கிறது. அடுத்து வரும் காலங்களில் இந்த நிறுவனத்தின் விற்பனையும், சந்தைப் பங்களிப்பும் குறிப்பிடத்தக்க அளவு ஏற்றம் பெறுமா என்பதை பொறுந்திருந்து பார்க்கலாம்.

08. ரெனோ கார்ஸ்
எட்டாவது இடத்தில் ரெனோ நிறுவனம் உள்ளது. கடந்த நிதி ஆண்டின் முதல் அரையாண்டு காலத்தில் 2.33 சதவீதமாக இருந்த இந்நிறுவனத்தின் சந்தைப் பங்களிப்பானது இப்போது 2.67 சதவீதமாக உயர்ந்துள்ளது. வெறும் 0.2 சதவீத வித்தியாசத்தில் ஏழாவது இடத்தை ஃபோர்டு நிறுவனத்திடம் இருந்து பின்தங்கியது. புதிய ட்ரைபர் மற்றும் க்விட் கார்களின் வரவு இந்த நிறுவனத்தின் சந்தைப் பங்களிப்பை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டு காலத்தில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் 1.10 சதவீத பங்களிப்புடன் 9-வது இடத்திலும், 1.06 சதவீத பங்களிப்புடன் கியா நிறுவனம் 10-வது இடத்திலும் உள்ளது. நிஸான் மோட்டார்ஸ் 0.71 சதவீத பங்களிப்பையும், ஸ்கோடா நிறுவனம் 0.51 சதவீத பங்களிப்பையும், எம்ஜி மோட்டார்ஸ் 0.46 சதவீத பங்களிப்பையும், ஃபியட் க்றைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் 0.36 சதவீத பங்களிப்புடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
| Rank | Brands | Market Share H1 2019 | Market Share H1 2018 |
| 1 | Maruti Suzuki | 50.20 | 52.82 |
| 2 | Hyundai | 18.49 | 15.94 |
| 3 | Mahindra | 7.52 | 6.53 |
| 4 | Toyota | 4.86 | 4.63 |
| 5 | Tata Motors | 4.75 | 6.21 |
| 6 | Honda | 4.60 | 5.49 |
| 7 | Ford | 2.69 | 2.85 |
| 8 | Renault | 2.67 | 2.33 |
| 9 | Volkswagen | 1.10 | 1.06 |
| 10 | Kia | 1.06 | NA |
| 11 | Nissan | 0.72 | 1.15 |
| 12 | Skoda | 0.51 | 0.47 |
| 13 | MG Motors | 0.46 | NA |
| 14 | FCA | 0.36 | 0.52 |
Source: ET Auto


Click it and Unblock the Notifications








