போக்குவரத்து விதிமீறுவோருக்கு அடுத்த ஆப்பு ரெடியாகிறது!
போக்குவரத்து விதிமீறலை தடுக்கும் விதமாக, புதிய அபாரதத் திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. இது பெரும் களேபரத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், போக்குவரத்து விதிமீறலை தடுக்க அடுத்த திட்டமும் தயாராகி வருகிறது.

புதிய அபாரத் தொகை மூலமாக போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறையும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில், போக்குவரத்து விதிமீறலை தடுப்பதற்கான அடுத்த அஸ்திரத்தையும் மத்திய அரசு கையில் எடுத்துள்ளது.

அதன்படி, வாகனங்களின் காப்பீட்டு கணக்கையும், போக்குவரத்து போலீசாரின் வாகனத் தணிக்கை விபரங்களையும் ஆன்லைன் முறையில் இணைப்பதற்கான முயற்சிகளை இந்திய காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு முகமை (IRDA) மேற்கொண்டுள்ளது.

இதனை நடைமுறை சாத்தியப்படுத்துவற்காக ஆய்வு செய்து ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்குவதற்காக சிறப்பு குழுவையும் ஐஆர்டிஏ நியமித்துள்ளது. மேலும், ஏற்கனவே இருக்கும் இணையதள தகவல் பரிமாற்ற முறையையும் மேம்படுத்தி, இந்த புதிய நடைமுறையை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளையும் ஐஆர்டிஏ மேற்கொண்டுள்ளது.

விதிமீறலில் ஈடுபடும் வாகனங்கள் குறித்த போக்குவரத்து போலீசாரின் கணிணி பதிவேடுகளையும், காப்பீட்டு கணக்கையும் இணைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளின் ஜாதகமே ஐஆர்டிஏ.,வின் புதிய சாஃப்ட்வேருடன் இணைக்கப்பட்டு இருக்கும்.

இதன்படி, விதிமீறலில் ஈடுபடும் உரிமையாளர் தனது வாகனத்தின் காப்பீட்டை புதுப்பிக்கும்போது, விதிமீறல்களின் எண்ணிக்கை இதர விஷயங்களை கணக்கில் வைத்து வாகன உரிமையாளருக்கு தர மதிப்பீடு வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் காப்பீட்டு பிரிமீயத் தொகையை காப்பீட்டு நிறுவனங்கள் நிர்ணயிக்கும்.

வெளிநாடுகளில் இதேபோன்ற நடைமுறை அமலில் உள்ளது. அதிகமாக விதிமீறலில் வாகன உரிமையாளர்கள் காப்பீட்டை புதுப்பிக்கும்போது மிக அதிக பிரிமீயத்தை செலுத்த வேண்டிய சூழல் ஏற்படும். எனவே, விதிமீறல்களின் எண்ணிக்கை வெகுவாக குறைய வாய்ப்பு இருப்பதாக ஐஆர்டிஏ அமைப்பு கருதுகிறது.

மேலும், டெல்லி உள்ளடக்கிய வட மத்திய பிராந்தியத்தில் இந்த புதிய நடைமுறையை அமல்படுத்த ஐஆர்டிஏ அமைப்பு முடிவு செய்துள்ளது. இது வெற்றிகரமாக அமையும்பட்சத்தில் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இந்த புதிய நடைமுறையை அமல்படுத்த ஐஆர்டிஏ திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








