அட்டகாசமான அம்சங்களுடன் வருகிறது புதிய இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக்!
மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய இசுஸி வி க்ராஸ் பிக்கப் டிரக் விரைவில் அறிமுகமாக இருக்கிறது. அதன் விபரங்களை காணலாம்.

அமெரிக்காவில் பிரிமீயம் ரக பிக்கப் டிரக்குகள் ஆஃப்ரோடு பிரியர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உண்டு. அதேபாணியில், இந்தியாவிலும் பிரிமீயம் ரக பிக்கப் டிரக்குகளை மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் களமிறக்கின. ஆனால், அதன் மீது எதிர்பார்த்த அளவு இந்தியர்களுக்கு ஈர்ப்பு இல்லை.

ஆஃப்ரோடு என்றாலே, மஹிந்திரா தார் அல்லது ஃபோர்ஸ் குர்கா என்ற மாடல்கள்தான் இந்தியர்களின் சாய்ஸ். மேலும், பிக்கப் டிரக் என்றாலே சரக்கு வாகனம் என்ற கண்ணோட்டம் இந்தியர்கள் மத்தியில் இருக்கிறது.

இந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட இசுஸு டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அடிப்படையிலான வி க்ராஸ் மாடலானது இந்திய ஆஃப்ரோடு பிரியர்களை கவர்ந்து இழுத்து வருகிறது. மேலும், மிரட்டலான தோற்றம், சக்திவாய்ந்த எஞ்சின், கரடுமுரடான சாலைகளை எதிர்கொள்வதற்கு சிறப்பு தொழில்நுட்ப வசதிகள் என ஆஃப்ரோடு பிரியர்களை வசியம் செய்துவிட்டது என்றே கூறலாம்.

மேலும், பிரிமீயம் பிக்கப் டிரக்குகள் மீது இந்தியர்களின் கவனத்தை திசை திருப்பியது. தனக்கென தனி மார்க்கெட்டை மெல்ல பிடித்து வரும் இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக்கின் மேம்படுத்த மாடல் அடுத்த இரு மாதங்களுக்குள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரிய வந்துள்ளது.

அதாவது, நவீன தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு உட்பட்ட எஞ்சினுடன் புதிய இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் மற்றும் புதிய க்ரில் அமைப்பு கொடுக்கப்படஇருக்கிறது. பம்பர்களும் வடிவமைப்பில் மாறுதல் பெறுகிறது.

புதிய இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக்கில் முக்கிய மாற்றமாக, தற்போது பயன்படுத்தப்படும் 2.5 லிட்டர் டீசல் எஞ்சினுக்கு பதிலாக பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு உட்பட்ட புதிய 1.9 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. எஞ்சின் சிசி குறைக்கப்பட்டாலும், அதிக பவரை வெளிப்படுத்தும் திறனுடன் வருகிறது.

புதிய 1.9 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 162 பிஎச்பி பவரையும், 360 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். தற்போதைய எஞ்சினைவிட 28 பிஎச்பி பவரையும், 40 என்எம் டார்க் திறனை கூடுதலாக வழங்கும் திறன் படைத்தது. 4 வீல் டிரைவ் சிஸ்டமும் நிரந்தர அம்சமாக இருக்கும்.

புதிய இன்டீரியர் அமைப்பும் எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்பை படங்களில் பழுப்பு மற்றும் கருப்பு இன்டீரியர் இடம்பெற்றிருப்பது தெரிய வருகிறது. ஆங்காங்கே பியானோ பிளாக் என்ற பளபளப்புமிக்க கருப்பு வண்ண பாகங்களுடன் இன்டீரியர் தரத்தை உயர்த்துகிறது. லெதர் இருக்கைகள் கொடுக்கப்பட இருக்கிரது.

புதிய இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக்கில் மேம்படுத்தப்பட்ட புதிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் பயன்படுத்தப்பட இருக்கிறது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். மொத்தத்தில் ஆஃப்ரோடு பயன்பாட்டிற்கு ஏற்ற தனித்துவ மாடலாக வாடிக்கையாளர் தேர்வில் இடம்பெறும்.

புதிய இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக் மாடல் அடுத்த மாதம் அல்லது ஜூன் மாத துவக்கத்தில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய மாடலைவிட ரூ.2.5 லட்சம் கூடுதல் விலையில் வரும் என்று தகவல்கள் கூறுகின்றன.
Source: Autocar India


Click it and Unblock the Notifications








