வருகிறது பிரம்மாண்டமான புதிய ஜாகுவார் எஸ்யூவி!
சொகுசு கார் தயாரிப்பில் புகழ்பெற்ற ஜாகுவார் நிறுவனம் உயர் சொகுசு ரகத்தில் புத்தம் புதிய எஸ்யூவி மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த எஸ்யூவி குறித்த தகவல்கள் கார் பிரியர்கள் மத்தியில் பேராவலை தூண்டி இருக்கிறது. இந்த புதிய எஸ்யூவி குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

ஜாகுவார் ஜே-பேஸ் என்ற பெயரில் இந்த பிரம்மாண்ட எஸ்யூவி வர இருக்கிறது. ஆண்டுதோறும் உலகின் சிறந்த கார்களை தேர்வு செய்து விருது வழங்கும் குழுவில் இருக்கும் நடுவர்கள் சிலரை அழைத்து பிரத்யேகமாக இந்த புதிய எஸ்யூவி மாடலை ஜாகுவார் நிறுவனம் காண்பித்து இருக்கிறது. மேலும், ஜாகுவார் எக்ஸ்ஜே காரின் முழுமையான எலெக்ட்ரிக் கார் மாடலும் இந்த நிகழ்ச்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

இந்த தகவல்கள் மெல்ல வெளியுலகுக்கும் கசிந்து விட்டன. புத்தம் புதிய ஜாகுவார் ஜே-பேஸ் எஸ்யூவி மாடலானது நிறுவனத்தின் மிக உயரிய வகையில் அதிக விலை கொண்ட எஸ்யூவி மாடலாக வர இருக்கிறது. புதிய தலைமுறை லேண்ட்ரோவர் எஸ்யூவி மாடல்கள் உருவாக்கப்பட இருக்கும் ஜாகுவார்-லேண்ட்ரோவர் நிறுவனத்தின் எம்எல்ஏ பிளாட்ஃபார்மில்தான் இந்த புதிய ஜே-பேஸ் எஸ்யூவியும் உருவாக்கப்பட இருக்கிறது.

இந்த பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும் புதிய எஸ்யூவி கார்களை மின்சார மாடலாகவும் மாற்றுவதற்கான கட்டமைப்பு கொள்கைகளை பெற்றிருக்கிறது. அதன்படி, ஜாகுவார் ஜே-பேஸ் எஸ்யூவி எலெக்ட்ரிக் மாடலில் அறிமுகம் செய்யப்படும் என்று ஆணித்தரமாக நம்பப்படுகிறது.

தற்போது விற்பனையில் உள்ள ஜாகுவார் எஃப்-பேஸ் எஸ்யூவிக்கு மேலான ரகத்திலும் விலையிலும், புதிய ஜாகுவார் ஜே-பேஸ் எஸ்யூவி விற்பனைக்கு வர இருக்கிறது. எம்எல்ஏ பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும் கார்கள் தற்போதைய கட்டமைப்பு கொள்கைகளைவிட இலகு ரகத்திலான மாடல்களை உருவாக்கும் வாய்ப்பை தரும்.

புதிய ஜே-பேஸ் எஸ்யூவி 5 டோர் மாடலாக வெளிவர இருக்கிறது. புதிய ஜாகுவார் ஜே- பேஸ் எஸ்யூவியில் பெட்ரோல், டீசல் மற்றும் ஹைப்ரிட் மாடல்களில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் கார்களுக்கான மவுசு வெகுவாக அதிகரிக்கும்போது, அப்படியே முழுமையான எலெக்ட்ரிக் எஸ்யூவியாக மாற்றப்படும்.

புதிய ஜாகுவார் ஜே-பேஸ் எஸ்யூவியானது பென்ட்லீ பென்டைகா, ரோல்ஸ்ராய்ஸ் கல்லினர், லம்போர்கினி உரஸ் உள்ளிட்ட உயர்வகை எஸ்யூவி மாடல்களுடன் நேரடியாக போட்டி போடும். விலையும் அதற்கு இணையாக நிர்ணயிக்கப்படும். 2021ம் ஆண்டு சந்தைக்கு வரும் என்று தெரிகிறது.

இதுதவிர்த்து, பல புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடல்களையும் களமிறக்குவதற்கான முயற்சிகளில் ஜாகுவார் லேண்ட்ரோவர் கூட்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வரும் 2025ம் ஆண்டு முதல் எலெக்ட்ரிக் வாகனங்கள் பக்கம் முழுமையாக கவனம் செலுத்த ஜாகுவார் லேண்ட்ரோவர் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








