கூடுதல் வசதிகளுடன் ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் புதிய பேஸ் வேரியண்ட் அறிமுகம்!
டாடா ஹாரியர் எஸ்யூவியின் நெருக்கடியால் ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் அதிக வசதிகள் கொண்ட புதிய பேஸ் வேரியண்ட் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியானது பெட்ரோல், டீசல் மாடல்களில் ஸ்போர்ட், லான்ஜிடியூட், லான்ஜிடியூட் ஆப்ஷனல், லிமிடேட், லிமிடேட் ஆப்ஷனல், லிமிடேட் ப்ளஸ் ஆகிய வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதில், ஸ்போர்ட் வேரியண்ட்தான் விலை குறைவான பேஸ் மாடலாக விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், டாடா ஹாரியர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு கடும் சந்தைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியை தவிர்க்கும் விதமாக, தற்போது ஸ்போர்ட் வேரியண்ட்டில் கூடுதல் வசதிகளை சேர்த்து ஸ்போர்ட் பிளஸ் என்ற புதிய வேரியண்ட்டாக விற்பனைக்கு கொண்டுள்ளது ஜீப் நிறுவனம்.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் புதிய ஸ்போர்ட் பிளஸ் வேரியண்ட்டின் பெட்ரோல் மாடலுக்கு ரூ.15.99 லட்சமும், டீசல் மாமடலுக்கு ரூ.16.99 லட்சமும் எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, ஸ்போர்ட் வேரியண்ட்டைவிட ரூ.59,000 கூடுதல் விலையில் வந்துள்ளன.

புதிய ஸ்போர்ட் பிளஸ் வேரியண்ட்டில் 16 அங்குல சில்வர் வண்ண அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. கருப்பு வண்ணத்திலான ரூஃப் ரெயில்கள் மற்றும் பின்புற கதவில் ஸ்போர்ட் பிளஸ் பேட்ஜ் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

மேலும், பின்புற விண்ஷீல்டு கண்ணாடி, கதவுகள் மேற்பகுதிகளில் பிளாஸ்டிக் சட்டங்கள் பொருத்தப்பட்டுள்ளன. புதிய ஸ்போர்ட் ப்ளஸ் வேரிண்ட்டில் பார்க்கிங் சென்சார்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஸ்போர்ட் பிளஸ் வேரியண்ட்டில் டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம் இடம்பெற்றிருப்பது முக்கிய அம்சமாக கூறலாம். இதனை 5.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனத்தின் மூலமாகவே கட்டுப்படுத்த முடியும்.

இந்த வேரியண்ட்டில் எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் சிஸ்டம், டியூவல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் மற்றும் டிராக்ஷன் கன்ட்ரோல் உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

எஞ்சின் தேர்வுகளில் மாற்றம் இல்லை. பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.4 லிட்டர் டர்போ எஞ்சின் அதிகபட்சமாக 163 எச்பி பவரையும், டீசல் மாடலில் இருக்கும் 2.0 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 173 எச்பி பவரையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது.

புதிய ஜீப் காம்பஸ் ஸ்போர்ட் பிளஸ் வேரியண்ட்டில் கீ லெஸ் என்ட்ரி, பவர் ஃபோல்டிங் சைடு மிரர்கள் மற்றும் 7.0 அங்குல தொடுதிரை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் ஆகியவை இடம்பெறவில்லை என்பது சிறிய ஏமாற்றமே. எனினும், பட்ஜெட் பிரச்னை இருப்பவர்களுக்கு ரூ.59,000 கூடுதல் விலையில் மேற்கண்ட வசதிகள் திருப்திப்படுத்துவதாகவே இருக்கும்.


Click it and Unblock the Notifications








