டொயோட்டா பார்ச்சூனருடன் நேருக்கு நேராக மோத களமிறங்கும் ஜீப் கார்.. இந்தியாவில் சூடுபிடிக்கும் போட்டி
அமெரிக்காவை சேர்ந்த ஜீப் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் டொயோட்டா பார்ச்சூனருக்கு போட்டியாக புதிய கார் ஒன்றை களமிறக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவை சேர்ந்த உலகப்புகழ் பெற்ற கார் நிறுவனங்களில் ஒன்று ஜீப். இந்நிறுவனத்தின் எஸ்யூவி ரக கார்கள் உலகம் முழுக்க பிரபலமாக விளங்குகின்றன. குறிப்பாக ஆஃப் ரோடு திறன்கள் நிறைந்த எஸ்யூவி ரக கார்களை தயாரிப்பதில் ஜீப் நிறுவனத்திற்கு நிகர் ஜீப் நிறுவனம்தான். ஜீப் நிறுவனம் தற்போது ஃபியட் க்றைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் (FCA - Fiat Chrysler Automobiles) குழுமத்தின் ஒரு அங்கமாக செயல்பட்டு வருகிறது.

ஜீப் நிறுவனத்தின் காம்பஸ் கார் இந்திய மார்க்கெட்டில் மிகவும் பிரபலமான எஸ்யூவி மாடலாக திகழ்கிறது. டாடா ஹாரியர் மற்றும் மஹிந்திரா எஸ்யூவி500 உள்ளிட்ட கார்களுக்கு ஜீப் காம்பஸ் விற்பனையில் சவால் அளித்து வருகிறது. ஆஃப் ரோடு திறன்கள் என பார்த்தால், ஜீப் காம்பஸ்தான் தலை சிறந்து விளங்குகிறது. ஜீப் நிறுவனம் சமீபத்தில்தான் காம்பஸ் காரின் ட்ரெயில்ஹாக் வேரியண்டை விற்பனைக்கு அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஃப் ரோடு சாகச பிரியர்கள் எதிர்பார்க்கும் அத்தனை அம்சங்களும் நிறைந்த முழுமையான ஆஃப் ரோடு மாடலாக ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் விற்பனைக்கு வந்துள்ளது. இதுதவிர ரேங்லர் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனையும் ஜீப் நிறுவனம் வரும் மாதங்களில் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

இந்த சூழலில் ஜீப் நிறுவனம் காம்பஸ் காரை அடிப்படையாக கொண்ட 7 சீட்டர் எஸ்யூவி காரை இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளை தொடங்கியிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், ஃபோர்டு எண்டேவர் மற்றும் டொயோட்டா பார்ச்சூனர் உள்ளிட்ட கார்களுடன் போட்டியிடும்.

ஆனால் இந்திய மார்க்கெட்டில் 7 சீட்டர் எஸ்யூவி காரை விற்பனைக்கு அறிமுகம் செய்வது என்பது ஜீப் நிறுவனத்தின் புதிய திட்டம் அல்ல. ஏற்கனவே இது தொடர்பான பணிகளை ஜீப் நிறுவனம் செய்து கொண்டுதான் இருந்தது. இந்திய மார்க்கெட்டில் 7 சீட்டர் எஸ்யூவி காரை களமிறக்குவது தொடர்பாக ஜீப் நிறுவனமே குறிப்பால் தெரிவித்திருந்தது.

இந்த சூழலில் தற்போது இந்த திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக ET Auto செய்தி வெளியிட்டுள்ளது. இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், ஃபோர்டு எண்டேவர் மற்றும் டொயோட்டா பார்ச்சூனர் கார்களின் போட்டியாளராக நிலைநிறுத்தப்படும். இதன் டாப் எண்ட் வேரியண்ட்டில் முறையான 4×4 ட்ரைவ்ட்ரெயின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவலை தூண்டியுள்ள இந்த 7 சீட்டர் எஸ்யூவி காரை ஜீப் நிறுவனம் புனேவின் புறநகர் பகுதியான ராஞ்சாகாவுனில் உள்ள பிளாண்ட்டில் உற்பத்தி செய்யவுள்ளது. உள்ளூரில் உற்பத்தி செய்யப்படுவதால், இந்திய மார்க்கெட்டிற்கு ஏற்ப மிக சவாலான விலையை ஜீப் நிறுவனம் நிர்ணயம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இருந்தபோதும் ஜீப் டிஎன்ஏவில் எவ்விதமான சமரசமும் செய்து கொள்ளப்படாது. ஜீப் நிறுவனத்திற்கே உரிய சிறப்பான ஆஃப் ரோடு திறன்களுடன் இந்த புதிய 7 சீட்டர் எஸ்யூவி எதிர்பார்க்கப்படுகிறது. 7 சீட்டர் எஸ்யூவி தவிர, சப்-4 மீட்டர் எஸ்யூவி கார் ஒன்றையும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஜீப் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.

இந்த காரையும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய ஜீப் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இந்த புதிய சப்-4 மீட்டர் எஸ்யூவி கார், ஜீப் நிறுவனத்திற்கு மிகப்பெரிய விற்பனை எண்ணிக்கையை கொண்டு வந்து சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஃபியட் க்றைஸ்லர் குழுமம் இந்தியாவில் அடுத்த சில ஆண்டுகளில் பெரிய அளவிலான முதலீடுகளை செய்யும் என கூறப்படுகிறது.

இவை தவிர தனது இன்ஜின் லைன் அப்பை பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு இணங்கும் வகையில் மேம்படுத்தும் பணிகளையும் ஜீப் நிறுவனம் செய்து வருகிறது. பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. பிஎஸ்-6 விதிகளுக்கு ஏற்ப சிறிய டீசல் இன்ஜின்களை மேம்படுத்த அதிக செலவு ஆகும்.

எனவே பல்வேறு நிறுவனங்கள் பிஎஸ்-6 விதிகள் அமலுக்கு வந்த பின் சிறிய டீசல் இன்ஜின்களின் உற்பத்தியை நிறுத்தி விட முடிவு செய்துள்ளன. ஓரிரு நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக அனைத்து டீசல் இன்ஜின் கார்களின் உற்பத்தியையும் நிறுத்தவுள்ளன. ஆனால் ஜீப் நிறுவனம் பிஎஸ்-6 விதிமுறைகள் அமலான பிறகும், தனது எஸ்யூவிக்களில் தொடர்ந்து டீசல் இன்ஜின்களை பயன்படுத்தவுள்ளது.

முன்னதாக ஜீப் நிறுவனத்தின் 7 சீட்டர் எஸ்யூவி கார், 2020ம் ஆண்டின் இரண்டாவது பாதி அல்லது 2021ம் ஆண்டின் முதல் பாதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்பார்க்கப்படும் விலை உள்ளிட்ட வேறு தகவல்கள் எதுவும் தற்போதைக்கு வெளியாகவில்லை.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








