40 நாட்களில் 250 மில்லியனைத் தொட்ட கியா: எதில் தெரியுமா...?
மற்ற கார் நிறுவனங்களுக்கு கிடைக்காத அங்கீகாரம், புதிதாக தொடங்கியுள்ள கியா நிறுவனத்திற்கு கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

உலகின் 8வது மிகப் பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான கியா, இந்தியாவில் கால் தடம் பதிக்கும் விதமாக அண்மையில் அதன் உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கியது. அந்த வகையில், நாட்டின் தென்பகுதியான ஆந்திர மாநிலத்தில்தான் அதன் முதல் தொழிற்சாலையை அமைத்துள்ளது.
இங்கிருந்துதான் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், கார் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.

இந்த நிறுவனம், எஸ்பி2ஐ என்னும் மாடலைத்தான் விற்பனைக்கு முதல் முறையாக விற்பனைக்கு களமிறக்க இருக்கின்றது. அவ்வாறு கூடிய விரைவில் இந்த மாடல் இந்தியச் சாலையை கலக்க உள்ளது.

இந்த எஸ்யூவி மாடல் கார், பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்டில் தயாராகி வருகின்றது. மேலும், இது வாகன உலகத்தின் ஜாம்பவானான டாடா நிறுவனத்தின் ஹாரியர் மற்றும் ஜீப் காம்பஸ் நிறுவனத்திற்கு போட்டியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்த காரின் விற்பனைக்கு முன்னதாகவே, விளம்பரத்திற்காக பெரும் தொகையை கியா நிறுவனம் முதலீடு செய்தது. அந்த வகையில் உருவாக்கப்பட்ட விளம்பரம்தான் வெறும் 40 நாட்களில் 250 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விளம்பரத்தின்மூலம் கியா நிறுவனத்தின் எஸ்பி2ஐ கார் 36.2 சதிவீதம் விற்பனையைப் பெறும் என்றும், நிறுவனத்தின் பிராண்ட் பெயருக்கு 15.4 சதவீதம் விற்பனைப் பெறும் என்றும் சில புள்ளி விவரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. மேலும், இந்த விளம்பரத்தின் மூலம் கியா நிறுவனத்தின் கார்கள்மீது அதிகளவில் எதிர்பார்ப்பு நிலவி வருவதாக கூறப்படுகிறது.

அதேசமயம், இந்த விளம்பரத்தின் இசையில் மெய்மறந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், அதனை தரவிறக்கம் செய்திருப்பதாகவும், எண்ணற்றோர் இந்த விளம்பரத்தைச் சமூக வலைதளங்களில் ஷேர் செய்தும் உள்ளனர். மேலும், சிலர் அவர்களின் மொபைல் போன்களின் ரிங் டோனாகவும் வைத்துள்ளனர்.
இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் இணையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாகவே, இணையவாசிகளை மையமாகக் கொண்டு இந்த விளம்பரம் பரப்பட்டது. அதற்கேற்ப, அதன் பலனையும் அந்த நிறுவனம் தற்போது பெற்றுள்ளது.

அவ்வாறு, நாள் ஒன்றுக்கு 1.2 லட்சம் வீதமாக, இந்த விளம்பரத்தை 40 நாட்களுக்கு உள்ளாக 250 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். அதில், 200 மில்லியன் யுடியூபிலும், 50 மில்லியன் மற்ற வளைதளப் பக்கத்திலும் பார்வையிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின், விற்பனை மற்றும் மார்கெட்டிங் தலைவர் மனோஹர் பாத் கூறியதாவது, "எங்களின் முதல் தயாரிப்பிற்கு இந்தியர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் இந்த எதிர்பார்ப்பு எங்களுக்கு மிகவும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விளம்பரமானது, கியாவின் முதல் தயாரிப்பு குறித்த ஆவலை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டள்ளது. அதேசமயம், அந்த நிறுவனத்தின் இலக்கையும் வெளிப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.


Click it and Unblock the Notifications








