டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவிற்கு கடும் சவால்... கியா கார்னிவல் இன்ஜின் விபரங்கள் கசிந்தன...
டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவிற்கு கடும் சவால் அளிக்கவுள்ள கியா கார்னிவல் எம்பிவி காரின் இன்ஜின் விபரங்கள் கசிந்துள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தென் கொரியாவை சேர்ந்த கியா நிறுவனம் ஆந்திர மாநிலம் அனந்த்ப்பூர் பகுதியில் தொழிற்சாலையை கட்டமைத்துள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள செல்டோஸ் எஸ்யூவியை விற்பனைக்கு அறிமுகம் செய்ய கியா நிறுவனம் தற்போது முழு வீச்சில் தயாராகி வருகிறது.

ஹூண்டாய் கிரெட்டா, நிஸான் கிக்ஸ் மற்றும் ரெனால்ட் டஸ்டர் உள்ளிட்ட கார்களுடன் கியா செல்டோஸ் போட்டியிடவுள்ளது. இந்திய மார்க்கெட்டிற்கான முதல் கியா கார் செல்டோஸ்தான். இதன்பின் இரண்டாவதாக கார்னிவல் எம்பிவியை கியா நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

கியா கார்னிவல் எம்பிவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவது உறுதியாகி விட்டது என்பதும், இதுதான் இந்திய மார்க்கெட்டிற்கான கியா நிறுவனத்தின் இரண்டாவது மாடல் என்பதும் ஏற்கனவே வெளிவந்த தகவல்கள்தான். கியா கார்னிவல் எம்பிவி இந்திய மார்க்கெட்டில் வரும் 2020ம் ஆண்டின் முதல் காலாண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கியா கார்னிவல் எம்பிவி சிகேடி (CKD - Completely Knocked Down) யூனிட்டாக வரவுள்ளது. ரூ.22 லட்சம் முதல் ரூ.28 லட்சம் வரையிலான விலைகளில் எதிர்பார்க்கப்படுகிறது. மிகவும் பிரபலமான டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவிற்கு சிறந்த மாற்றாக கியா கார்னிவல் எம்பிவி இருக்கும். டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா ரூ.14.93 லட்சம் முதல் ரூ.22.43 லட்சம் வரையிலான விலைகளில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவின் நீளம் 5,115 மிமீ. அகலம் 1,985 மிமீ. உயரம் 1,740 மிமீ. வீல் பேஸ் 3,060 மிமீ. பரிமாணங்கள் அடிப்படையில் பார்த்தால், டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவை காட்டிலும் கியா கார்னிவல் சற்று பெரியதாக இருக்கும். இந்திய மார்க்கெட்டிற்கான கியா கார்னிவல் மாடலில், 2.2 லிட்டர், 4-சிலிண்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச மார்க்கெட்களில் விற்பனையாகும் மாடலிலும் இந்த இன்ஜின் ஆப்ஷன் உள்ளது. இந்த இன்ஜின் பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணையானதாக இருக்கும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 3,800 ஆர்பிஎம்மில் 200 பிஎச்பி பவரையும், 1,750-2,750 ஆர்பிஎம்மில் 441 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும் வல்லமை வாய்ந்தது.

இதில், 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் வழியாக இன்ஜின் சக்தி முன் சக்கரங்களுக்கு கடத்தப்படுகிறது. மறுபக்கம் டொயோட்டா இன்னோவா காரில், 2.4 லிட்டர் 4-சிலிண்டர், 2.8 லிட்டர் 4-சிலிண்டர் என 2 டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. எனினும் இன்னோவா கிரிஸ்டாவின் டீசல் இன்ஜின்களை காட்டிலும், கார்னிவலின் டர்போ-சார்ஜ்டு டீசல் இன்ஜின் கணிசமாக அதிக பவர் மற்றும் டார்க்கை உருவாக்கும்.

அதே சமயம் வெளிநாடுகளில் விற்பனையாகும் கார்னிவல் காரில், 3.3 லிட்டர், வி6 பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் உள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 270 பிஎச்பி பவர் மற்றும் 318 என்எம் டார்க் திறனை உருவாக்கும் வல்லமை வாய்ந்தது. ஆனால் இந்திய மார்க்கெட்டிற்கான கார்னிவல் எம்பிவி காரில் இந்த இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








