கியா கார்னிவல் எம்பிவி சன்ரூஃப் அமைப்புடன் சோதனை ஓட்டம்...
செல்டோஸ் எஸ்யூவி-க்கு அடுத்ததாக தனது இரண்டாவது மாடலாக கார்னிவல் எம்பிவியை அறிமுகப்படுத்த தென் கொரியா ஆட்டோமொபைல் நிறுவனமான கியா மோட்டார்ஸ் திட்டமிட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, இந்த எம்பிவி கார் தற்போது TC நம்பர் ப்ளேட்டுடன் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய கார்னிவல் கார் உட்புறத்தில் அதிகளவில் தொழிற்நுட்பங்கள் மற்றும் பின்புற இருக்கை பேக்கேஜ்களை கொண்டுள்ளது. இந்த காரின் டாப் வேரியண்ட்கள் எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட்டபிள் முன்புற இருக்கைகள், தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், லெதரால் மூடப்பட்ட்ட இருக்கைகள், சன்ரூஃப் போன்றவற்றை பெற்றுள்ளன.

ஆனால் இந்த அம்சங்கள் கார்னிவல் எம்பிவி மாடலின் விலை குறைந்த வேரியண்ட்களுக்கு வழங்கப்படவில்லை. இந்த கார் இந்தியாவில் அறிமுகமாகும்போது முந்தைய மாடலை விட சில சிறிய அளவிலான மாற்றங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் விலை குறைவான வேரியண்ட்கள் குடும்பமாக பயணிக்க ஏதுவாகவும், டாப் வேரியண்ட்கள் விஐபிகளின் போக்குவரத்திற்கு உகந்த வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்6 தரத்தில் அறிமுகமாகவுள்ள இந்த எம்பிவி காரில் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படவுள்ளது/. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 200 பிஎச்பி பவரையும் 440 என்எம் டார்க் திறனையும் முன்புற சக்கரங்களுக்கும் வழங்கும் ஆற்றல் கொண்டது. ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளன.

கியா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் கார்னிவல் எம்பிவி காரின் லேட்டஸ்ட் டீசர் ஒன்றை இந்தியன் கான்செப்டில் அறிமுகப்படுத்தி இருந்தது. இந்த டீசரில் இந்த கார் 6 இருக்கை ஃபார்மெட்டில் காணப்பட்டது. ஆனால் இந்தியாவில் அறிமுகமாகும்போது கூடுதலாக 7-இருக்கை மற்றும் 8-இருக்கை தேர்வுகளையும் இந்த கார் கொண்டிருக்கும். இந்த டீசர் மூலம் வெளிவந்த முழு தகவல்களையும் அறிய கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

இத்தகைய இருக்கை அமைப்பு, என்ஜினின் தரம் உள்ளிட்டவற்றை எல்லாம் விட கியா கார்னிவல் காரில் கவனிக்கத்தக்க வகையில் எலக்ட்ரிக் ஸ்லைடிங் கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. 80ஆம் வருடங்களில் கொடிக்கட்டி பறந்த சுசுகி கேரி மைக்ரோவான் மற்றும் மாருதி ஆம்னி போன்ற மாடல்களால் ஸ்லைடிங் கதவுகள் இன்று வரை இந்திய சந்தையில் தனி ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளன.

அதுமட்டுமில்லாமல் தற்போதைய கடுமையான போக்குவரத்து நெரிசல்களுக்கு ஸ்லைடிங் கதவுகள் மிகவும் ஏற்றதாக இருக்கும். ஆனால் தற்சமயம் இத்தகைய ஸ்லைடிங் கதவுகளுடன் மாருதி எகோ மாடல் மட்டும் தான் விற்பனையாகி வருகிறது. அறிமுகத்திற்கு பின்னர் இந்த எம்பிவி கார் எந்த மாடலுடனும் நேரடியாக போட்டியிட போவதில்லை.

ஏனெனில் கார்னிவல் எம்பிவி இதன் பிரிவில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவிற்கு மேற்புறத்திலும் டொயோட்டா வெல்ஃபைர், மெர்சிடிஸ் பென்ஸ் வி-கிளாஸ் போன்ற மாடல்களுக்கு கீழேயும் நிலைநிறுத்தப்படவுள்ளது. அடுத்த மாதம் அறிமுகமாகவுள்ளதாக கூறப்படுகின்ற இந்த புதிய காரின் விலை இந்திய சந்தையில் ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.32 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம்.


Click it and Unblock the Notifications








