இன்னோவா க்ரிஸ்ட்டாவுக்கு போட்டியாக வரும் கியா கார்னிவல்... சோதனை ஓட்டம் தீவிரம்!
சிறந்த எம்பிவி கார் என்றாலே, டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாதான் என்ற நிலை உள்ளது. இன்னோவா க்ரிஸ்ட்டா காரை நினைத்து உருகி, மருகி நிற்கும் வாடிக்கையாளர்கள் வேறு காரை கனவிலும் நினைத்து பார்ப்பதில்லை. அவ்வாறானவர்களுக்கு வேறு சிறந்த தேர்வும் இல்லை.

அட்டகாசமான தோற்றம், பிரிமீயமான அம்சங்கள், அதிக இடவசதி, அந்தஸ்தை உயர்த்தும் வல்லமை, மங்காத ரீசேல் மதிப்பு ஆகியவை இன்னோவா க்ரிஸ்ட்டா காரை சுற்றி வர காரணங்களாக அமைந்துள்ளன. இன்னோவா க்ரிஸ்ட்டாவுக்கு மாற்று தேர்வு என்ற பேச்சுக்கே இடமில்லாத நிலை இருக்கிறது. இந்த கூற்றை உடைப்பதற்கான முயற்சியில், கியா மோட்டார்ஸ் நிறுவனம் இறங்கி உள்ளது.

இன்னோவா க்ரிஸ்ட்டா காரைவிட அனைத்து விதத்திலும் சிறந்த எம்பிவி கார் தேர்வை இந்தியர்களுக்கு வழங்குவதற்கான முயற்சியாக தனது கார்னிவல் எம்பிவி காரை களமிறக்க முடிவு செய்துள்ளது. இதற்காக, தற்போது கார்னிவல் எம்பிவி காரை இந்திய மண்ணில் வைத்து தீவிரமான சாலை சோதனைகளுக்கு உட்படுத்தி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

சென்னையில் சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருந்த கியா கார்னிவல் எம்பிவி காரின் படத்தை ஸிக்வீல்ஸ் தளம் வெளியிட்டு இருக்கிறது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா வாங்க இருப்போரையும், எம்பிவி கார் வாங்க இருப்போர் மத்தியிலும் கியா கார்னிவல் கார் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏனெனில், இது இன்னோவா க்ரிஸ்ட்டா போலேவே பிரிமீயம் ரகத்தில்தான் களமிறக்கப்பட இருக்கிறது. அழகான டிசைன், அதிக இடவசதி, பிரிமீயம் இன்டீரியர் ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாக இருக்கும். எனினும், எஞ்சினின் நம்பகத்தன்மை, பராமரிப்பு மற்றும் ரீசேல் மதிப்பு போன்றவை இன்னோவா க்ரிஸ்ட்டா அளவுக்கு இருக்குமா என்பது சில வருடங்கள் போன பின்னரே தெரிய வரும்.

எனினும், கியா நிறுவனத்தை குறைத்து மதிப்பிட முடியாது. இந்திய வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையையும், நன்மதிப்பையும் பெற்ற ஹூண்டாய் மோட்டார்ஸ் அங்கம்தான் கியா மோட்டார்ஸ் என்பதுடன் உலக அளவில் மிக முன்னணி கார் நிறுவனமாகவும் விளங்குகிறது. எனவே, கியா தயாரிப்பு மீது அதிக நம்பிக்கை வைக்க முடியும். அதற்கு சான்றாக அண்மையில் செல்டோஸ் காருக்கான வரவேற்பை எடுத்துக் கொள்ள முடியும்.

கியா கார்னிவல் எம்பிவி காரில் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதுவரை வந்த ஸ்பை படங்களின்படி, புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பனி விளக்குகள், எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள் இடம்பெற்றுள்ளன. முகப்பில் தனித்துவமான க்ரில் அமைப்பும் இதற்கு அழகு சேர்க்கிறது.

கியா கார்னிவல் எம்பிவி காரின் இன்டீரியர் மிகவும் நேர்த்தியாகவும், எளிமையாகவும் இருப்பதுடன் பிரிமீயம் அம்சங்களை பெற்றுள்ளது. இந்த காரில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். யுவோ கனெக்டெட் கார் தொழில்நுட்பமும் கொடுக்கப்பட்டு இருக்கும்.

இருக்கைகளை அட்ஜெஸ்ட் செய்வதற்கான வசதி, காற்றோட்டம் மற்றும் குளிர் நேரத்தில் வெதுவெதுப்பான உணர்வை தரும் வென்ட்டிலேடட் மற்றும் ஹீட்டட் இருக்கைகள் ஆகியவை இந்த காரில் இடம்பெற்றுள்ளன.

இந்த காரில் 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி வசதி, ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டமும் உள்ளன. இந்த கார் இன்னோவா க்ரிஸ்ட்டாவிலிருந்து வேறுபடுத்தும் மிக முக்கிய விஷயம், இதில் மாருதி ஓம்னி, ஈக்கோ கார்களை போன்று ஸ்லைடிங் டோர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஏறி, இறங்குவது எளிதாக இருக்கும்.

கியா கார்னிவல் எம்பிவி காரில் 8 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், 360 டிகிரி கேமரா வசதி, லேன் டிபார்ச்சர் வார்னிங், பிளைண்ட் ஸ்பாட் டிடெக்ஷன், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் கேமரா என ஏராளமான பாதுகாப்பு அம்சங்களையும் பெற்றிருக்கும்.

புதிய கியா கார்னிவல் எம்பிவி காரில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு இணையான 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 202 பிஎச்பி பவரையும், 440 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் வர இருக்கிறது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரைவிட விலை உயர்ந்த மாடலாக நிலைநிறுத்தப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. அதாவது, ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சம் இடையிலான ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், விலையை சரியாக நிர்ணயித்தால் மட்டுமே, இன்னோவா க்ரிஸ்ட்டாவுடன் போட்டி போட முடியும். அடுத்த ஆண்டு ரிலீஸ் பட்டியலில் உள்ளது.
Source: Zigwheels


Click it and Unblock the Notifications








