கியா காம்பேக்ட் எஸ்யூவியின் பெயர் விபரம் கசிந்தது!
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய கியா காம்பேக்ட் எஸ்யூவியின் பெயர் விபரம் கசிந்துள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் செல்டோஸ் என்ற எஸ்யூவி முதல் மாடலாக இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த காருக்கு இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், அடுத்து கார்னிவல் எம்பிவி காரை அறிமுகப்படுத்த இருக்கும் கியா மோட்டார்ஸ் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை மூன்றாவதாக இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது.

ஹூண்டாய் வெனியூ காரின் அடிப்படையில் கியா காம்பேக்ட் எஸ்யூவி கார் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் தற்போது இந்தியாவில் வைத்து சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இந்த காரின் பெயர் விபரம் ஆட்டோமொபைல் இணையதளம் வாயிலாக கசிந்துள்ளது. கியா நிறுவனம் சோனெட் (Sonet) என்ற பெயரை புதிய காருக்காக பதிவு செய்துள்ளது. இந்த பெயர் புதிய காம்பேக்ட் எஸ்யூவிக்கு பயன்படுத்தப்படும் என்று நம்பப்படுகிறது.

அதாவது, கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பெரும்பாலான யுட்டிலிட்டி ரக கார்கள் அனைத்துமே எஸ் என்ற ஆங்கில எழுத்திலேயே ஆரம்பிக்கும். சோல், ஸ்டோனிக், செல்டோஸ், ஸ்போர்ட்டஜ், சொரென்ட்டோ, செடோனா(கார்னிவல் எம்பிவி கார்) என பெரும்பாலான பெயர்கள் எஸ் எழுத்தில் துவங்குவது போல வைக்கிறது.

எனவே, தற்போது QYI என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் காம்பேக்ட் எஸ்யூவி கார் மாடலுக்கு சோனெட் பெயர் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது. வரும் பிப்ரவரி மாதம் நடக்க இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் சோனெட் எஸ்யூவியின் கான்செப்ட் மாடலை கியா மோட்டார்ஸ் காட்சிக்கு வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கார் 4 மீட்டர் நீளத்திற்கும் குறைவாக வடிவமைக்கப்பட்டு இருக்கும். ஹூண்டாய் வெனியூ காரின் அடிப்படையிலான இந்த மாடல் டிசைனில் வேறுபடும். அதேநேரத்தில், வெனியூ காரின் எஞ்சின் தேர்வுகள்தான் இந்த காரிலும் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கியா சோனெட் காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், 17 அங்குல அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்டுகள், சன்ரூஃப், 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சாட் நவ் நேவிகேஷன் வசதி, யுவோ கனெக்டடெட் கார் செயலி உள்ளிட்ட ஏராளமான சிறப்பம்சங்களை இந்த கார் பெற்றிருக்கும்.

ஹூண்டாய் வெனியூ காரில் பயன்படுத்தப்படும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின், 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் பயன்படுத்தப்படும். பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் காரணமாக, 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுக்கு மாறலாம் என்று தெரிகிறது.

ரூ.7.5 லட்சம் ஆரம்ப விலையில் புதிய கியா சோனெட் எஸ்யூவியை எதிர்பார்க்கலாம். மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், ஹூண்டாய் வெனியூ, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், மஹிந்திரா எக்ஸ்யூவி300 உள்ளிட்ட கார்களுடன் போட்டி போடும். ஆந்திர மாநிலம் அனந்த்பூரில் உள்ள கியா மோட்டார்ஸ் ஆலையில் உற்பத்தி செய்யப்படும்.
குறிப்பு: மாதிரிக்காக கியா ஸ்டோனிக் படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
Via - IAB


Click it and Unblock the Notifications








