இந்திய மார்க்கெட்டில் எலெக்ட்ரிக் காரை களமிறக்க கியா திட்டம்... தென் கொரியாவில் பணிகள் தீவிரம்...
இந்திய மார்க்கெட்டில் எலெக்ட்ரிக் காரை களமிறக்க கியா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் சர்வதேச அளவில் புகழ் பெற்றதாக விளங்குகிறது. அதே தென் கொரியாவை சேர்ந்த கியா நிறுவனம் ஹூண்டாய் நிறுவனத்தின் ஒரு அங்கமாக செயல்பட்டு வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளிலும் வெற்றி கொடி நாட்டியுள்ள கியா, இந்திய மார்க்கெட்டில் நடப்பாண்டு (2019) காலடி எடுத்து வைக்கவுள்ளது.

இதற்காக ஆந்திர மாநிலம் அனந்த்ப்பூர் பகுதியில் கியா நிறுவனத்தின் பிரம்மாண்ட கார் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. நடப்பு 2019ம் ஆண்டின் இரண்டாவது பாதி முதல் 2022ம் ஆண்டு வரை, ஒவ்வொரு 6 மாதத்திற்கும் ஒரு புதிய காரை இந்திய மார்க்கெட்டில் வரிசையாக களமிறக்க வேண்டும் என கியா நிறுவனம் இலக்கு வைத்துள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடப்பட்ட எஸ்பி கான்செப்ட் (SP Concept) அடிப்படையில் உருவாகும் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்தான் கியா நிறுவனம் இந்தியாவில் களமிறக்கவுள்ள முதல் மாடல். இந்த கார் நடப்பாண்டின் இரண்டாவது பாதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் கிரெட்டா உள்ளிட்ட மாடல்களுடன் இது போட்டியிடும். இதன்பின் வரும் 2022ம் ஆண்டு வரை, ஒவ்வொரு 6 மாதத்திற்கும் ஒரு புதிய மாடலை கியா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதுதவிர இந்திய மார்க்கெட்டிற்கு என பிரத்யேகமாக எலெக்ட்ரிக் கார் ஒன்றை களமிறக்கும் பணிகளிலும் கியா நிறுவனம் ஈடுபட்டு வருவதாக காடிவாடி தளம் தற்போது செய்தி வெளியிட்டுள்ளது.

பேட்டரி ரேஞ்ஜில் இந்திய வாடிக்கையாளர்களின் விருப்பம் மற்றும் இந்திய வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் இதர முக்கிய அம்சங்கள் அனைத்தும் தென் கொரியாவில் உள்ள கியா நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு இந்திய மார்க்கெட்டிற்கான எலெக்ட்ரிக் காரை உருவாக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக கியா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மற்றும் சேல்ஸ் பிரிவின் துணை தலைவரான மனோகர் பாட், இந்திய மார்க்கெட்டிற்கான எலெக்ட்ரிக் கார் குறித்த சில தகவல்களை, மணி கண்ட்ரோல் தளத்திடம் கடந்த ஆண்டே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கார் வரும் 2021ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

கியா நிறுவனம் திட்டமிட்டுள்ளபடி அனைத்து விஷயங்களும் சரியாக நடந்தால், உலகளாவிய நிறுவனம் ஒன்றால், இந்திய மார்க்கெட்டிற்கு என பிரத்யேகமாக அறிமுகம் செய்யப்படும் முதல் எலெக்ட்ரிக் காராக இது இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர இந்திய மார்க்கெட்டில் வரும் காலங்களில் இன்னும் பல்வேறு எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு அறிமுகமாகவுள்ளன.

இதில், கியா நிறுவனத்தின் பேரன்ட் கம்பெனியான ஹூண்டாயின் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி குறிப்பிடத்தக்கது. இதன் விலை 25 லட்ச ரூபாய்க்குள் நிர்ணயம் செய்யப்படலாம் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் உலா வந்து கொண்டுள்ளன. இதுதவிர மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன், எம்ஜி நிறுவனத்தின் இஇஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி ஆகியவையும் வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதனிடையே சர்வதேச மார்க்கெட்களில் கியா நிறுவனம் விற்பனை செய்து வரும் கார் மாடல்களை, இந்திய வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப மாற்றும் பணிகளுக்கு ஐதராபாத்தில் உள்ள அந்நிறுவனத்தின் மேம்பாட்டு மையம் பொறுப்பேற்று கொண்டுள்ளது. முன்னதாக ஆந்திர மாநிலம் அனந்த்பூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கியா நிறுவனத்தின் தொழிற்சாலை, வரும் 2022ம் ஆண்டு, தனது முழு உற்பத்தி திறனை எட்டும் என கூறப்படுகிறது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








