டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாக வரும் கியா டெல்லுரைடு எஸ்யூவி கார்!
டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாக புத்தம் புதிய எஸ்யூவி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்வது குறித்து கியா மோட்டார் நிறுவனம் பரிசீலித்து வருகிறது.அந்த எஸ்யூவியின் படங்கள், விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கியா மோட்டார் நிறுவனத்தின் முதல் கார் மாடலாக செல்டோஸ் எஸ்யூவிக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அடுத்ததாக, டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மார்க்கெட்டை குறிவைத்து, புதிய கார்னிவல் எம்பிவி காரை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இதுதவிர்த்து, இரண்டு எலெக்ட்ரிக் கார்கள் உள்பட 5 புதிய கார் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு முடிவு செய்துள்ளது. இதில், அடுத்து டொயோட்டா ஃபார்ச்சூனர் மார்க்கெட்டை குறிவைத்து பிரிமீயம் எஸ்யூவி மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையிலான கார் சந்தையை குறிவைத்து இந்த புதிய மாடல்களை கியா மோட்டார்ஸ் பரிசீலித்து வருகிறது. இந்த நிலையில், இந்த 5 புதிய கார்களில் டெல்லுரைடு எஸ்யூவியும் ஒன்றாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது, டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 ஆகிய பிரிமீயம் ரக எஸ்யூவி மாடல்களுக்கு நிகரான வகை மாடலாக இருக்கும். வட அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் புதிய டெல்லுரைடு எஸ்யூவி விற்பனையில் இருக்கிறது.

இந்த ஆண்டு துவக்கத்தில் புதிய கியா டெல்லுரைடு எஸ்யூவி வட அமெரிக்காவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. பல்வேறு நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் 2020ம் ஆண்டு மாடலாக வெளியிடப்பட்டிருப்பதால், இதுவே இந்தியாவிற்கு கொண்டு வரப்படும் வாய்ப்பு இருக்கிறது.

புதிய கியா டெல்லுரைடு எஸ்யூவியில் 3.8 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 290 பிஎச்பி பவரையும், 355 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த காரில் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருப்பதுடன், ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் உள்ளது.

புதிய கியா டெல்லுரைடு எஸ்யூவி 5,000 மிமீ நீளமும், 1,990 மிமீ அகலமும், 1,750 மிமீ உயரமும் கொண்டது. இந்த காரின் வீல் பேஸ் 2,900 மிமீ ஆக உள்ளது. டொயோட்டா ஃபார்ச்சூனர் (2,745 மிமீ) மற்றும் ஃபோர்டு எண்டெவர் (2,850 மிமீ) ஆகிய எஸ்யூவிகளைவிட அதிக வீல் பேஸ் நீளம் கொண்டது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு போட்டியாக வரும் கார்னிவல் எஸ்யூவி அதிக இடவசதியுடன் கூடுதல் பிரிமீயம் அம்சங்களை பெற்றிருக்கிறது. அதேபோன்று, டொயோட்டா ஃபார்ச்சூனரைவிட அதிக சொகுசு அம்சங்களுடன் புதிய கியா டெல்லுரைடு வர இருப்பதாக தெரிகிறது. சந்தையில் பிரிமீயம் ரகத்தில் தனது கார்களை நிலைநிறுத்த கியா முயன்று வருகிறது.


Click it and Unblock the Notifications








