விற்பனையில் அசத்தும் கியா செல்டோஸ்... நடுக்கத்தில் போட்டியாளர்கள்!!
விற்பனைக்கு வந்த முதல் மாதத்திலேயே மிகச் சிறப்பான விற்பனையை பதிவு செய்துள்ளது கியா செல்டோஸ் எஸ்யூவி கார். கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்த ஆண்டின் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புதிய கார் மாடல் கியா செல்டோஸ். அந்த எதிர்பார்ப்பை பொய்க்காத வகையில், பெரும் முன்பதிவு எண்ணிகையுடன் கடந்த மாதம் 22ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகத் தினத்தன்றே, கையில் 32,000 முன்பதிவுகளுடன் மிக சவாலான விலையில் களமிறங்கியது.

இது போட்டியாளர்களுக்கு பெரும் நடுக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அறிமுகம் செய்யப்பட்ட முதல் மாதத்திலேயே கியா செல்டோஸ் காரின் விற்பனை அமர்க்களமாக அமைந்துள்ளது.

ஆம், கடந்த மாதம் 6,200 கியா செல்டோஸ் எஸ்யூவி கார்கள் இந்தியாவில் விற்பனையாகி உள்ளன. இதனால், ரூ.15 லட்சம் பட்ஜெட்டிலான எஸ்யூவி மார்க்கெட்டில் புதிய கியா செல்டோஸ் கார் விற்பனையில் முதன்மையான மாடல்களில் ஒன்றாக மாறி இருக்கிறது.

மேலும், கியா செல்டோஸ் காரின் விற்பனை ஹூண்டாய் க்ரெட்டா, நிஸான் கிக்ஸ், ரெனோ கேப்ச்சர், டாடா ஹாரியர், எம்ஜி ஹெக்டர், ஜீப் காம்பஸ் உள்ளிட்ட பல மாடல்களுக்கு சவாலாக இருக்கும் என்பதை காட்டுகிறது.

தற்போது ஆந்திர மாநிலம் அனந்த்பூரில் உள்ள ஆலையில் மாதம் 5,000 யூனிட்டுகள் என்ற இலக்குடன் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால், இந்த காருக்கான காத்திருப்பு காலம் 2 முதல் 3 மாதங்கள் வரை வேரியண்ட்டை பொறுத்து அமைந்துள்ளது.

கியா செல்டோஸ் காருக்கு அதிக வரவேற்பு கிடைத்ததற்கு இதன் ஆளுமையான தோற்றம் மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இந்த கார் 4,315 மிமீ நீளமும், 1,800 மிமீ அகலமும், 1,620 மிமீ உயரமும் கொண்டது. இதன் வீல்பேஸ் 2,610 மிமீ ஆக உள்ளது. 433 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி உள்ளது.

இந்த புதிய எஸ்யூவி காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி பனி விளக்குகள், சில்வர் ஸ்கிட் பிளேட்டுகள், அழகான டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள், 17 அங்குல மெஷின் கட் அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள் மற்றும் டியூவல் டோன் என்ற இரட்டை வண்ணத் தேர்வுகள் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.

இந்த காரின் உட்புறம் மிக அதிக இடவசதியுடன் அதிக தொழில்நுட்ப சிறப்புகளுடன் வசீகரிக்கிறது. புதிய கியா செல்டோஸ் காரில் 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான யுவோ என்ற செயலி மூலமாக 37 விதமான தொழில்நுட்ப வசதிகளை பெற முடியும்.

புதிய கியா செல்டோஸ் கார் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் சக்திவாய்ந்த 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. மேலும், இந்த எஞ்சின் தேர்வுகள் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் கிடைப்பது வாடிக்கையாளர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

புதிய கியா செல்டோஸ் கார் அதிக சிறப்பம்சங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகளை பெற்றிருப்பதுடன் மிக சவாலான விலையில் வந்துள்ளது. புதிய கியா செல்டோஸ் கார் ரூ.9.69 லட்சம் முதல் ரூ.15.99 லட்சம் வரையிலான விலையில் கிடைப்பதும் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது.


Click it and Unblock the Notifications








