கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் கார் ஷோரூம் நொய்டாவில் திறப்பு!
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் கார் ஷோரூம் டெல்லி அருகே நொய்டாவில் திறக்கப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹூண்டாய் மோட்டார்ஸ் குழுமத்தின் அங்கமாக செயல்பட்டு வரும் கியா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் இந்தியாவில் கார் வர்த்தகத்தை துவங்க இருக்கிறது. அண்மையில் ஆந்திராவில் அமைக்கப்பட்டு இருக்கும் புதிய ஆலையில் சோதனை முறையில் கார் உற்பத்தி துவங்கப்பட்டது.
இந்த நிலையில், இந்தியாவில் முதல் மாடலாக எஸ்பி2ஐ என்ற பெயரில் குறிப்பிடப்படும் எஸ்யூவி ரக காரை இந்த ஆண்டு மத்தியில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் ஷோரூம்களை திறக்கும் முயற்சியில் அந்நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
அதன்படி, டெல்லி அருகே நொய்டாவில் தனது முதல் கார் ஷோரூமை அந்நிறுவனம் திறந்துள்ளது. அல்லைடு மோட்டார்ஸ் என்ற அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் சார்பில் இந்த கார் ஷோரூம் அமைக்கப்பட்டு இருக்கிறது.

கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் கார் ஷோரூம் மிக பிரம்மாண்டமானதாக இருக்கிறது. இந்த ஷோரூமில் கியா நிறுவனத்தின் கியா ரியோ மற்றும் ஸ்டிங்கர் ஆகிய கார்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருப்பது தெரிய வருகிறது.
எனினும், கடந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த எஸ்பி-2 கான்செப்ட் அடிப்படையில் உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய எஸ்யூவி மாடலையே முதலாவதாக விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது கியா மோட்டார்ஸ்.
அடுத்ததாக கியா கார்னிவல் எம்பிவி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிய வந்துள்ளது. மேலும், பல புதிய கார் மாடல்களை அந்நிறுவனம் இந்திய சந்தையில் வரிசை கட்ட இருக்கிறது.

நொய்டாவில் முதல் ஷோரூமை திறந்த நிலையில், சென்னை, பெங்களூர், டெல்லி, மும்பை உள்ளிட்ட நாட்டின் பிற முக்கிய நகரங்களிலும் கியா கார் ஷோரூம்கள் விரைவில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Image Courtesy :Manohar Bhat


Click it and Unblock the Notifications








