பட்ஜெட் விலை எலெக்ட்ரிக் காரை களமிறக்க கியா மோட்டார்ஸ் திட்டம்!
தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம் செல்டோஸ் என்ற எஸ்யூவி காருடன் இந்திய சந்தையில் விரைவில் வர்த்தகத்தை துவங்க இருக்கிறது. செல்டோஸ் எஸ்யூவி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அடுத்து 7 சீட்டர் எம்பிவி காரையும் அறிமுகம் செய்வது குறித்து பரிசீலித்து வருகிறது. இந்த கார் மாருதி எர்டிகா காருக்கு போட்டியாக இருக்கும்.

புதிய கியா கார்கள் தொழில்நுட்பத்திலும், கட்டமைப்பு தரம் மற்றும் டிசைனில் சிறப்பாக இருக்கும் என்பதால் இந்திய வாடிக்கையாளர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்த நிலையில், எதிர்கால வர்த்தகத்தை நிலைப்படுத்தும் விதத்தில், எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்வதும் குறித்தும் கியா மோட்டார்ஸ் தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

அந்த வகையில், வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் தோதுவான விலையில் புதிய எலெக்ட்ரிக் காரை களமிறக்க திட்டமிட்டுள்ளது. இந்த புதிய காரை தனது தாய் நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸுடன் இணைந்து தயாரிக்கவும் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே, ஹூண்டாய் நிறுவனம் தனது கோனா எலெக்ட்ரிக் காரை இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது.

இந்த நிலையில், அடுத்த எலெக்ட்ரிக் கார் மாடலானது கியா- ஹூண்டாய் கூட்டணியில் ஒரே பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பெரிய அளவிலான முதலீட்டை தவிர்த்து, சரியான விலையில் எலெக்ட்ரிக் காரை தர முடியும் என்று கியா நிறுவனம் கருதுகிறது.

மேலும், இந்த புதிய எலெக்ட்ரிக் கார் முழுக்க முழுக்க இந்தியாவுக்காக தயாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. வரும் 2021ம் ஆண்டிற்குள் எப்போது வேண்டுமானாலும் இந்த புதிய எலெக்ட்ரிக் காரை கியா மோட்டார்ஸ் அறிமுகம் செய்யும் என்று தெரிகிறது. அதாவது, வரும் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய மாடல் அறிமுகமாகும் வாய்ப்புள்ளது.

வெளிநாடுகளில் கியா நிறுவனம் ஹைப்ரிட், மின்சார கார்களை விற்பனை செய்து வருகிறது. எனவே, மின்சார கார்களுக்கான தொழில்நுட்பம் அந்த நிறுவனத்திடம் உள்ளது. அதேநேரத்தில், ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும்போது முதலீடு பெருமளவு குறையும்.

மத்திய அரசின் ஃபேம்- 2 திட்டத்தின் கீழ் தனிநபர் பயன்பாட்டு வாகனங்களுக்கும் மானியம் வழங்க வேண்டும் என்று கியா கோரியுள்ளது. இதனால், விலையை மிக சவாலானதாக வாடிக்கையாளர்களுக்கு தர முடியும். மின்சார வாகன விற்பனையை மத்திய அரசு ஊக்குவிக்க புதிய திட்டங்களை அறிமுகம் செய்வது குறித்து பரிசீலித்து வருகிறது. எனவே, கியா நிறுவனத்தின் கோரிக்கை ஏற்கப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் தனிநபர் பயன்பாட்டு சந்தையில் புதிய எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய இருக்கின்றன. அப்போது, கியா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் காரும் கடும் சந்தைப் போட்டியை கொடுக்கும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications








