புதிய கியா QYI காம்பேட் எஸ்யூவி மீண்டும் சோதனை ஓட்டம்...
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு மாடலாக QYI காம்பேக்ட் எஸ்யூவி மீண்டும் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் கிடைத்துள்ள தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்த கியா QYI காம்பேக்ட் எஸ்யூவி காரானது டிசைனில் கியா ஸ்டோனிக் எஸ்யூவியை அப்படியே ஒத்துள்ளது. சரியான நீளத்தில் ரூஃப் லைன் மற்றும் பெரிய ஃபாக் விளக்குகள் உள்ளிட்டவற்றை இந்த புதிய கார் கொண்டுள்ளதை சோதனை ஓட்ட புகைப்படங்களின் மூலம் தெரிய வருகிறது.

அவைமட்டுமின்றி வட்ட வடிவிலான ஹெட்லேம்ப்ஸ், மேற்கூரையின் நடுவில் சிறிய முறிவு போன்றவையும் இந்த புதிய காரில் இருப்பது இந்த புகைப்படங்களில் காட்டப்பட்டுள்ளது. மேலும் காரின் க்ரில் பகுதி பெரிய அளவில் வடிவமைக்கப்பட்டிருப்பதும் தெரிகிறது.

இந்த சப்-4 மீட்டர் எஸ்யூவி கார் அறிமுகமாகும்போது புலி மூக்கின் வடிவமைப்பில் பெரிய க்ரில்லை பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் வென்யூ மாடலின் ஃப்ளாட்ஃபாரத்தில் இந்த கியா QYI மாடல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

அதனால் வென்யூ மாடல் கொண்டுள்ள 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜினுடன் இந்த கார் அறிமுகமாகவுள்ளது. அதேபோல் கியா செல்டோஸின் டீசல் என்ஜின் தேர்வையும் இந்த கார் பெறவுள்ளது. ஆனால் அந்த மாடலை விட வெளியிடும் ஆற்றல் அளவில் மாற்றத்தை கண்டிப்பாக இந்த கார் கொண்டிருக்கும். ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ட்யூல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

அறிமுகத்திற்கு பிறகு புதிய கியா QYI மாடல் ஹூண்டாய் வென்யூ மற்றும் நிஸான் கிக்ஸ், ரெனால்ட் டஸ்டர், மஹிந்திரா எக்ஸ்யூவி300, விரைவில் அப்டேட்டாகவுள்ள டாடா நெக்ஸான் மற்றும் காம்பேக்ட் எஸ்யூவியின் பிரிவில் கொடிக்கட்டி பறந்து வருகின்ற மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா போன்ற கார்களுடன் போட்டியிடவுள்ளது.

2020ஆம் ஆண்டின் முதல் கால்பகுதியில் அறிமுகமாகவுள்ளதாக கூறப்படும் இந்த கார் இந்திய சந்தையில் ரூ.6.50 லட்சத்தில் இருந்து ரூ.11.50 லட்சம் வரையில் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த காரை தற்காலிகமாக தான் QYI என்கிற குறியீட்டுடன் குறிப்பிட்டு வருகின்றனர். ஆனால் இந்த கார் கியா சொனெட் என்ற பெயரில் தான் அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

கியா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து செல்டோஸ், ஸ்டோனிக், சொரெண்டோ மற்றும் ஸ்போர்டேஜ் போன்ற மாடல்கள் உலகம் முழுவதும் சிறந்த முறையில் விற்பனையாகும் கார்களாக உள்ளன. குறிப்பாக இந்திய சந்தையில் இந்நிறுவனம் வெறும் செல்டோஸ் மாடலை மட்டும் தான் இதுவரை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் இந்த நிறுவனம் தற்போதைக்கு நான்காவது பெரிய விற்பனை நிறுவனமாக விளங்குகிறது. இதனால் இந்த புதிய காரின் விற்பனையில் எந்த தடுமாற்றமும் இருக்காது என்பது உறுதி.
Source: Team BHP


Click it and Unblock the Notifications








