சென்னை துறைமுகம் வழியாக கியா செல்டோஸ் காரின் ஏற்றுமதி துவங்கியது!
இந்தியாவிலிருந்து கியா செல்டோஸ் காரின் ஏற்றுமதி துவங்கப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹூண்டாய் மோட்டார்ஸ் அங்கமாக செயல்படும் தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் செல்டோஸ் காருடன் இந்தியாவில் வர்த்தகத்தை துவங்கியது. முதல் கார் மாடலாக வந்த செல்டோஸ் கார் இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. இதுவரை 50,000க்கும் மேற்பட்டோர் இந்த காரை புக்கிங் செய்துள்ளனர்.

முன்பதிவு சிறப்பாக இருந்து வருவதால், இந்த காருக்கான காத்திருப்பு காலம் 2 முதல் 3 மாதங்கள் வரை நீடிக்கிறது. இந்த நிலையில், இந்தியாவிலிருந்து கியா செல்டோஸ் காரின் ஏற்றுமதி துவங்கப்பட்டுள்ளது

ஆந்திர மாநிலம் அனந்த்பூரில் உள்ள கியா ஆலையில் உற்பத்தி செய்யப்படும் செல்டோஸ் கார்கள் சென்னை துறைமுகம் வழியாக மத்திய கிழக்கு மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. முதல் லாட்டில் 471 செல்டோஸ் கார்களை கியா நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது. அடுத்து தென் அமெரிக்க நாடுகளுக்கும் இந்தியாவிலிருந்து செல்டோஸ் கார் ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாக தெரிகிறது.

கார் ஏற்றுமதிக்காக சென்னை துறைமுக கழகத்துடன் கியா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த செப்டம்பர் 5ந் தேதி ஒப்பந்தம் செய்தது. இந்த நிலையில், உற்பத்தி சீரடைந்துள்ளதையடுத்து, கியா செல்டோஸ் காரின் ஏற்றுமதி துவங்கப்பட்டுள்ளது. கியா கார்களின் ஏற்றுமதி தொடர்பான பொறுப்புகளை க்ளோவிஸ் இந்தியா அனந்த்பூர் பிரைவேட் லிமிடேட் நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது.

சென்னை துறைமுக பொறுப்பு கழகம் மற்றும் கியா மோட்டார்ஸ் இடையிலான கார் ஏற்றுமதி தொடர்பான ஒப்பந்தம் வரும் 2029ம் ஆண்டு வரை போடப்பட்டுள்ளது. மேலும், கியா கார்களை ஏற்றுமதி செய்வதற்கான விசேஷ கட்டமைப்பு வசதிகளை சென்னை துறைமுக பொறுப்புக் கழகம் ஏற்படுத்தி கொடுத்திருப்பதுடன், சிறப்பு கட்டணச் சலுகைகளையும் வழங்குகிறது.

இந்தியாவில் கியா மோட்டார்ஸ் நிறுவனம் உற்பத்தி செய்யும் மொத்த கார்களில் 30 சதவீதம் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது. கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் சென்னை துறைமுகத்தை பயன்படுத்தி, கடந்த 2005ம் ஆண்டு முதல் கார் ஏற்றுமதி செய்து வருவதாகவும், வரும் 2028ம் ஆண்டு வரை ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் சென்னை துறைமுக பொறுப்புக் கழகத்தின் தலைவர் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் 52,948 கார்கள் சென்னை துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 79,530 கார்களை ஏற்றுமதி செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கியா மோட்டார்ஸ் நிறுவனமும் சென்னை துறைமுகத்தை பயன்படுத்த இருப்பதால், கார் ஏற்றுமதி வெகுவாக உயரும் என்றும் ரவீந்திரம் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








