கியா செல்டோஸ் எஸ்யூவி காரின் முக்கிய விபரங்கள் வெளியானது... !!
ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் கியா மோட்டார்ஸ் நிறுவனம் முதல் மாடலாக செல்டோஸ் என்ற எஸ்யூவி வகை காரை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி கார் பண்டிகை கால ரிலீஸ் பட்டியலில் உள்ளது. அட்டகாசமான டிசைன் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த புதிய கார் மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் கலக்க வருகிறது.

இந்தநிலையில், இந்த எஸ்யூவி காரின் முக்கிய தொழில்நுட்ப விபரங்களை ஆட்டோகார் இந்தியா தளம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கியா செல்டோஸ் கார் 4,315 மிமீ நீளமும், 1,800 மிமீ அகலமும், 1,620 மிமீ உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் 2,610 மிமீ வீல் பேஸ் பெற்றுள்ளதுடன், 190 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டுள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டா காரைவிட நீள, அகலம் மற்றும் வீல்பேஸ் என அனைத்திலும் கூடுதல் பரிமாணங்களை பெற்றுள்ளதால், மிட்சைஸ் மார்க்கெட்டில் பொருத்தமான மாடலாக வர இருக்கிறது. எனினும், இது ஹூண்டாய் க்ரெட்டா காரைவிட சற்றே பிரிமீயம் மாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய கியா செல்டோஸ் காரில் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் , 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட இருக்கின்றன. இதில், 1.5 லிட்டர் ஸ்மார்ட்ஸ்ட்ரீம் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 115 பிஎச்பி பவரையும், 144 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்பட இருக்கின்றன.

இந்த காரின் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 140 பிஎச்பி பவரையும், 242 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் வர இருக்கிறது. இந்த எஞ்சினுக்கு அதிக முன்பதிவுகள் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

அடுத்து, 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 115 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும். இந்த மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படும்.

புதிய கியா செல்டோஸ் காரில் 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் 360 டிகிரி கேமராவை இதன் திரை சப்போர்ட் செய்யும். மேலும், யுவோ கனெக்ட் மொபைல் அப்ளிகேஷன் மூலமாக ஏராளமான வசதிகளை பெற முடியும்.

புதிய கியா செல்டோஸ் காரில் 8 ஸ்பீக்கர்கள் கொண்ட போஸ் ஆடியோ சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிிறது. ஆம்பியன்ட் லைட் சிஸ்டமும் இடம்பெற்றுள்ளது. இந்த காரில் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், ரிமோட் எஞ்சின் ஸ்டார்ட் வசதி, வாகனத்தின் நகர்வை கண்காணிக்கும் வசதி, 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற இருக்கின்றன.

அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் புதிய கியா செல்டோஸ் காருக்கான முன்பதிவு துவங்கப்பட இருக்கிறது. ஆகஸ்ட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ரூ.10 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








