உண்மைதான்! இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாவதற்கு முன்பே கியா செல்டோஸ் டெலிவரி தொடங்கியது!!
இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே கியா செல்டோஸ் எஸ்யூவி காரின் டெலிவரி தொடங்கப்பட்டுள்ளது!! ஆம், உண்மைதான்.

தென் கொரியாவை சேர்ந்த கியா நிறுவனத்தின் செல்டோஸ் எஸ்யூவி கார் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்டோஸ் எஸ்யூவியுடன்தான் கியா மோட்டார் தனது இந்திய இன்னிங்ஸை தொடங்கவுள்ளது. ஆம், செல்டோஸ் எஸ்யூவிதான் கியா நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள முதல் கார்.

இந்தியாவில் கியா செல்டோஸ் கார் வரும் ஆகஸ்ட் 22ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதற்கு முன்னதாக கடந்த ஜூலை 16ம் தேதி முதல் செல்டோஸ் காருக்கான முன்பதிவை கியா நிறுவனம் தொடங்கியுள்ளது. நீங்கள் கியா செல்டோஸ் எஸ்யூவியை வாங்க விரும்பினால், 25 ஆயிரம் ரூபாய் முன்பணம் செலுத்தி புக்கிங் செய்து கொள்ளலாம்.

இந்திய மார்க்கெட்டில் டாடா ஹாரியர், எம்ஜி ஹெக்டர் உள்ளிட்ட கார்களுக்கு கியா செல்டோஸ் சவால் அளிக்கவுள்ளது. 10 முதல் 15 லட்ச ரூபாய் என்ற எக்ஸ் ஷோரூம் விலைகளில் கியா செல்டோஸ் எஸ்யூவி எதிர்பார்க்கப்படுகிறது. விலை தெரிவதற்கு முன்னதாகவே கியா செல்டோஸ் காருக்கு முன்பதிவுகள் குவிந்து வருகின்றன.

இந்திய மார்க்கெட்டிற்கு ஏற்ப விலை நிர்ணயம் மட்டும் சரியாக இருந்தால், கியா செல்டோஸ் விற்பனையில் சாதிப்பது உறுதி. இந்தியாவில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் என மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்களுடன் கியா செல்டோஸ் எஸ்யூவி விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த மூன்று இன்ஜின்களும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு இணையானதாக இருக்கும்.

வெனியூ மற்றும் ஹெக்டர் ஆகிய மாடல்களுக்கு பிறகு, இந்தியாவில் கனெக்டட் கார் தொழில்நுட்பத்தை பெறும் மூன்றாவது எஸ்யூவி செல்டோஸ். இந்தியாவில் 8 மோனோடோன் மற்றும் 5 ட்யூயல் டோன் கலர் ஆப்ஷன்களுடன் கியா செல்டோஸ் எஸ்யூவி விற்பனை செய்யப்படவுள்ளது. அத்துடன் எல்இடி ஹெட்லேம்ப்ஸ், எல்இடி டிஆர்எல்கள், எல்இடி பனி விளக்குகள் மற்றும் எல்இடி டெயில் லேம்ப்ஸ் இடம்பெறவுள்ளன.

எச்டி லைன் (HT Line) மற்றும் ஜிடி லைன் (GT Line) என 2 ட்ரிம் ஆப்ஷன்களில், HT E, HT K, HT K+, HT X, HT X+, GT K, GT X மற்றும் GT X+ என மொத்தம் 8 வேரியண்ட்களில் கியா செல்டோஸ் எஸ்யூவி விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த சூழலில் உலகின் முதல் கியா செல்டோஸ் உரிமையாளர், இந்த எஸ்யூவியை தற்போது டெலிவரி எடுத்துள்ளார்.

இந்தியாவில் இன்னும் விற்பனைக்கே அறிமுகம் செய்யப்படவில்லை. அதற்குள் டெலிவரியா? என குழப்பம் அடைய வேண்டாம். உலகின் முதல் செல்டோஸ் உரிமையாளர் அந்த காரை டெலிவரி எடுத்திருப்பது இந்தியாவில் அல்ல. தென் கொரியாவில். ஆம், இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாகவே தென் கொரிய மார்க்கெட்டில் செல்டோஸ் காரை கியா களமிறக்கிவிட்டது.

தற்போது வாடிக்கையாளர்களுக்கு காரை டெலிவரி செய்யும் பணிகளையும் கியா மோட்டார் தொடங்கி விட்டது. இந்திய மதிப்பில் தோராயமாக 11.2 லட்ச ரூபாய் முதல் 15.4 லட்ச ரூபாய் வரையிலான விலையில் தென் கொரிய மார்க்கெட்டில் கியா செல்டோஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தென் கொரியாவில் 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.6 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் கியா செல்டோஸ் காரில் வழங்கப்படுகின்றன. கியா செல்டோஸ் எஸ்யூவி அடுத்ததாக இந்திய மார்க்கெட்டிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கு இன்னும் ஒரு சில வாரங்களே உள்ளதால், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.


Click it and Unblock the Notifications








