செப்டம்பரில் அறிமுகமாகிறது புதிய கியா எஸ்பி2ஐ எஸ்யூவி!
புதிய கியா எஸ்பி2ஐ எஸ்யூவி சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வரும் நிலையில், வரும் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம் ஹூண்டாய் நிறுவனத்தின் அங்கமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்திய மார்க்கெட்டில் கியா நிறுவனமும் விரைவில் கால் பதிக்க இருக்கிறது. கடந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த எஸ்பி கான்செப்ட் அடிப்படையிலான எஸ்யூவியை முதலாவதாக களமிறக்க உள்ளது.

தற்போது கியா எஸ்பி கான்செப்ட் எஸ்யூவி தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்பட்டு சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மும்பையில் கியா எஸ்பி எஸ்யூவிகள் சோதனை ஓட்டத்தின்போது எடுக்கப்பட்ட படங்கள் வெளியாகி இருக்கின்றன.

இரண்டு டாப் வேரியண்ட் கியா எஸ்பி எஸ்யூவிகள் சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டுள்ளன. அங்க அடையாளங்கள் முழுமையாக மறைக்கப்பட்டு சோதனைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு எதிராக நிலைநிறுத்தப்பட இருக்கும் இந்த எஸ்யூவி டஸ்க்கர் அல்லது ட்ரெயில்ஸ்டெர் என்ற பெயரில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு நிகரானதாக இருந்தாலும் இந்த கியா எஸ்யூவியின் வீல் பேஸ் நீளம் சற்று கூடுதலாக இருக்கும் என்று தெரிகிறது. மேலும், க்ரெட்டா எஸ்யூவியைவிட உட்புறத்தில் இடவசதி கூடுதலாக இருக்கும் என்பதை கருதமுடியும்.

தற்போது வரும் பல எஸ்யூவி கார் மாடல்களில் இருப்பது போலவே, பானட்டை ஒட்டி இண்டிகேட்டர் மற்றும் எல்இடி பகல்நேர விளக்குகளும், அதற்கு சற்று இறக்கமாக ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள் பொருத்தப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது. எல்இடி டெயில் லைட்டுகளும் முக்கிய அம்சமாக இருக்கும்.

இந்த புதிய எஸ்யூவியின் சோதனை ஓட்ட கார்களில் சன்ரூஃப் இல்லை என்றாலும், உற்பத்திக்கு வரும் மாடல்களில் இடம்பெறும் என்று தெரிகிறது. இன்ஃஃபோடெயின்மென்ட் சிஸ்ட்ம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், வென்ட்டிலேட்டட் இருக்கைகள், அட்ஜெஸ்ட் வசதியுடன் ஹெட்ரெஸ்ட் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

இந்த புதிய எஸ்யூவியில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 1.5 லிட்டர் பெட்ரோல், டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது. ஹூண்டாய் க்ரெட்டா, நிஸான் கிக்ஸ், ரெனோ டஸ்ட்டர் மற்றும் ரெனோ கேப்ச்சர் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும். ரூ.10 லட்சம் முதல் ரூ.16 லட்சம் இடையிலான விலையில் செப்டம்பரில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Zigwheeles


Click it and Unblock the Notifications








