விற்பனையில் லம்போர்கினியை புதிய உச்சத்திற்கு எடுத்துச் சென்ற உரஸ் சூப்பர் எஸ்யூவி!
லம்போர்கினி உரஸ் சூப்பர் எஸ்யூவி விற்பனையில் சக்கைபோடு போட்டு வருகிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

எஸ்யூவி கார்களுக்கான வரவேற்பை பார்த்து சூப்பர் கார் தயாரிப்பு நிறுவனங்களும் எஸ்யூவி ரக மாடல்களை களமிறக்கி வருகின்றன. அதில், இத்தாலியை சேர்ந்த லம்போர்கினி நிறுவனம் களமிறக்கிய உரஸ் எஸ்யூவி உலக அளவில் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

உலகின் பெரும் பணக்காரர்களின் முதன்மை தேர்வாக லம்போர்கினி உரஸ் எஸ்யூவி மாறி இருப்பது அதன் விற்பனையில் இருந்தே தெரிய வருகிறது. கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான முதல் அரையாண்டு காலத்ததில் மொத்தம் 2,693 உரஸ் எஸ்யூவி கார்களை லம்போர்கினி நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

இதனால், லம்போர்கினி நிறுவனத்தின் விற்பனை தடாலடியாக உயர்ந்துள்ளது. நடப்பு ஆண்டின் முதல் அரையாண்டில் 4,553 கார்களை லம்போர்கினி விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டு மொத்த விற்பனையை விட அதிகம். அத்துடன், நடப்பு ஆண்டின் லம்போர்கினி நிறுவனத்தின் மொத்த விற்பனையில் உரஸ் எஸ்யூவி 60 சதவீத பங்களிப்பை வழங்கி இருக்கிறது. ஹூராகென், அவென்டேடார் கார்களின் விற்பனையைவிட அதிகம்.

இதனால், லம்போர்கினி நிறுவனம் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறது. லம்போர்கினி உரஸ் எஸ்யூவியின் பல்வேறு சிறப்பம்சங்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. இந்த சூப்பர் எஸ்யூவியில் பை- டர்போ 4.0 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 641 பிஎச்பி பவரையும், 850 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்கும் திறன் வாய்ந்தது.

இந்த காரில் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்ப்டடுள்ளது. நவீன வகையிலான ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மூலமாக எஞ்சின் சக்தி சக்கரங்களுக்கு கடத்தப்படுகிறது. ஆஃப்ரோடு மற்றும் சாதாரண சாலை பயன்பாடுகளுக்கு தக்கவாறு வெவ்வேறு நிலைகளில் இயக்கக்கூடிய டிரைவிங் மோடுகளும் உள்ளன.

லம்போர்கினி உரஸ் எஸ்யூவி அதிவிரைவான செயல்திறன் கொண்டது. இந்த சூப்பர் எஸ்யூவி 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 3.6 வினாடிகளில் எட்டிவிடும்.மணிக்கு 306 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது. உலகின் அதிசெயல்திறன் மிக்க எஸ்யூவி மாடல்களில் ஒன்றாகவும் கூறலாம்.

லம்போர்கினி உரஸ் எஸ்யூவி மாடலானது ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் எம்எல்பி எவோ பிளாட்ஃபார்மில்தான் உருவாக்கப்பட்டது. இதே பிளாட்ஃபார்மில்தான் ஆடி க்யூ7 மற்றும் போரேஷ் கேயென் எஸ்யூவி மாடல்களும் உருவாக்கப்பட்டன.

லம்போர்கினி நிறுவனம் 25 ஆண்டுகளுக்கு முன்னர் எல்எம்002 என்ற எஸ்யூவி மாடலை தயாரித்து உற்பத்தியை நிறுத்தியது. ஆனால், இரண்டாவது மாடலாக வெளியிடப்பட்டுள்ள உரஸ் எஸ்யூவி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்தியாவிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவில் லம்போர்கினி உரஸ் எஸ்யூவி ரூ.3 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








