புதிய லேண்ட்ரோவர் டிஃபென்டர் இந்திய வருகை விபரம்!
புதிய தலைமுறை லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவியின் இந்திய வருகை குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கடந்த செப்டம்பர் மாதம் நடந்த பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் இரண்டாம் தலைமுறை லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டது. அண்மையில் அமெரிக்காவில் இந்த புதிய எஸ்யூவி மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில், இந்திய இணையப்பக்கத்தில் அண்மையில் இந்த எஸ்யூவி சேர்க்கப்பட்டது குறித்து நாம் செய்தி வெளியிட்டு இருந்தோம். தற்போது இந்த எஸ்யூவி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பபட இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

முதலில் டிஃபென்டர் 110 என்ற லாங் வீல் பேஸ் மாடலும், அதைத்தொடர்ந்து டிஃபென்டர் 90 என்ற சாதாரண மாடல் அடுத்த ஆண்டு டிசம்பரில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. லேண்ட்ரோவர் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தால் இந்த செய்தி உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

டிஃபென்டர் 110 மாடலில் பெட்ரோல், டீசல் மற்றும் ஹைப்ரிட் வகை எரிபொருள் மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், பி-300 என்ற குறிக்கப்படும் மாடலில் 296 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் அளிக்கும் 2.0 லிட்டர் இன்ஜெனியம் பெட்ரோல் எஞ்சின் உள்ளது.

பி-400 என குறிக்கப்படும் மாடலில் 3.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 48V மைல்ட் ஹைப்ரிட் சிஸ்டத்துடன், 396 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். டி200 டீசல் எஞ்சின் மாடல் 197 பிஎச்பி பவரையும் 430 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதன் டி- 240 டீசல் எஞ்சின் வேரியண்ட்டானது 237 பிஎச்பி பவரையும், 430 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

பெட்ரோல், டீசல் மற்றும் ஹைப்ரிட் மாடல்கள் ஆகியவற்றில் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்படுகிறது. மேலும், ஆஃப்ரோடு பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில், ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் இந்த காரில் வழங்கப்படுகிறது.

முதல் கட்டமாக இந்த கார் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதைத்தொடர்ந்து, 2021ம் ஆண்டில் முக்கிய பாகங்களாக தருவிக்கப்பட்டு இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்படும்.

புதிய லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவியின் லாங் வீல் பேஸ் மாடல் ரூ.80 லட்சம் முதல் ரூ.97 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் வரலாம். மேலும், ஃபர்ஸ்ட் எடிசன் மாடலும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். இதற்கு ரூ.1.05 கோடி எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்படும் வாய்ப்புள்ளது. டிஃபென்டர் 90 மாடலுக்கு ரூ.70 லட்சம் முதல் ரூ.90 லட்சம் இடையிலான விலையில் வரும் வாய்ப்புள்ளது.

புதிய லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவியானது ஸ்டான்டர்டு, டிஃபென்டர் எஸ், டிஃபென்டர் எஸ்இ மற்றும் எச்எஸ்இ ஆகிய 4 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இந்த காரின் விலை உயர்ந்த இரண்டு வேரியண்ட்டுகளிலும் க்ளியர் சைட் வீடியோ டிரைவன் என்ற விசேஷமான உட்புற ரியர் வியூ மிரர் வழங்கப்படும். லெதர் இருக்கைகள், மெரிடியன் ஆடியோ சிஸ்டம், பிளைன்ட் ஸ்பாட் வார்னிங், வெர்ச்சுவர் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை இடம்பெறும்.

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எல்இடி விளக்குகள், பகல்நேர விளக்குகள் உள்ளிட்டவை கிடைக்கும். விலை உயர்ந்த வேரியண்ட்டுகளில் டியூவல் டோன் எனப்படும் இரட்டை வண்ணக் கலவையில் கிடைக்கும்.

புதிய டிஃபென்டர் எஸ்யூவிக்காக ஏராளமான சிறப்பு ஆக்சஸெரீகளை லேண்ட்ரோவர் உருவாக்கியுள்ளது. இதனை வாடிக்கையாளர்கள் விருப்பத்தின் பேரில் வாங்க முடியும். அர்பன் பேக், கன்ட்ரி பேக், அட்வென்ச்சர் பேக், எக்ஸ்ப்ளோரர் பேக் என 4 விதமான பேக்கேஜ்கள் வழங்கப்படும். இதில், கன்ட்ரி பேக் என்பது கரடுமுரடான சாலைகளில் இலகுவாக செல்ல உதவும் கூடுதல் ஆக்சஸெரீகளை வழங்கும்.

தவிரவும், அட்வென்ச்சர் பேக் மற்றும் எக்ஸ்ப்ளோரர் பேக் ஆகிய பேக்கேஜ்களில் முழுமையான ஆஃப்ரோடு பயன்பாட்டுக்கான ஆக்சஸெரீகள் இடம்பெற்றிருக்கும். இதுதவிர, கூடுதல் ஆக்சஸெரீகளையும் லேண்ட்ரோவர் விற்பனைக்கு கொண்டு வரும். இந்த மாடலானது ஆல்டெரெயின் சிஸ்டம் மற்றும் 900 மிமீ ஆழமுடைய நீர் நிலைகளை கடக்கும் தகவமைப்புகளை பெற்றிருக்கும்.
Source: NDTV Auto


Click it and Unblock the Notifications








