வியக்க வைக்கும் தொழில்நுட்பங்களுடன் லெக்சஸ் எலெக்ட்ரிக் கார்!
வியக்க வைக்கும் தொழில்நுட்ப அம்சங்களுடன் லெக்சஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் காரின் கான்செப்ட் மாடல் டோக்கியோ மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ஜப்பானை சேர்ந்த டொயோட்டா நிறுவனத்தின் சொகுசு கார் விற்பனைப் பிரிவாக லெக்சஸ் பிராண்டு செயல்படுகிறது. உலக அளவில் லெக்சஸ் கார்களுக்கு தனி வாடிக்கையாளர் வட்டம் உள்ளது. இந்த நிலையில், எதிர்கால சந்தையை மனதில் வைத்து மின்சார கார் மாதிரி மாடல் ஒன்றை லெக்சஸ் நிறுவனம் டோக்கியோ மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைத்துள்ளது.

லெக்சஸ் எல்எஃப்-30 என்ற பெயரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த மாதிரி கார் மாடலில் ஏராளமான நவீன தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த காரின் 4 சக்கரங்களிலும் தலா ஒரு மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டு இருக்கும். இதனால், மிகச் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தும் திறனை இந்த காரின் தயாரிப்பு நிலை மாடல் பெறும்.

அடுத்து, இந்த காரின் ஓட்டுனர் சரியான கோணத்தில் அமர்ந்து ஓட்டுவதற்கான வாய்ப்பை வழங்கும் போஸ்ச்சர் கன்ட்ரோல் சிஸ்டம் இடம்பெற இருக்கிறது. அடுத்து, இந்த காரில் ஸ்டீயரிங் பை வயர் சிஸ்டமும் முக்கியமானதாக இருக்கும்.

அதாவது, ஸ்டீயரிங் வீல் மற்றும் சக்கரங்களுக்கு உலோக பொருட்களால் ஆன நேரடியாக இணைப்பு இல்லாமல், ஸ்டீயரிங் வீல் பகுதியிலும், ஆக்சில் பகுதியிலும் பொருத்தப்படும் சாதனங்கள் மின்னணு சமிக்ஞை மூலமாக ஸ்டீயரிங் வீல் திரும்பும் அளவை கணித்து சக்கரங்களை திருப்புவதற்கான தொழில்நுட்பத்தை இந்த ஸ்டீயரிங் பை வயர் சிஸ்டம் வழங்கும். இது மிக மிக நவீன தொழில்நுட்ப அம்சமாக இடம்பெறும்.

இதேபோன்று, வயர்லெஸ் சார்ஜர் மூலமாக இந்த எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை சார்ஜ் ஏற்றுவதற்கான வாய்ப்பையும் பெற முடியும். இந்த காரின் பேட்டரியின் மூலமாக வீட்டிற்கான மின்சாரத்தை பெறுவதற்கான வாய்ப்பும் வழங்கப்படும். இதற்காக, பிரத்யேக செயற்கை நுண்ணறிவு சாதனங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன.

மேலும், அதிநவீன டிசைன் தாத்பரியங்களுடன் இந்த புதிய கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் இந்த எலெக்ட்ரிக் கார் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஓட்டுதல் தரம், தொழில்நுட்பம், டிசைன் என அனைத்திலும் புதிய பாதையை அமைக்க இந்த எலெக்ட்ரிக் கார் கான்செப்ட் உதவும் என்று லெக்சஸ் தெரிவித்துள்ளது.

வரும் 2025ம் ஆண்டுக்குள் அனைத்து கார்களின் மின்சார மாடல்களை அறிமுகப்படுத்த லெக்சஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எதிர்காலத்தில் உருவாக்கப்பட இருக்கும் லெக்சஸ் மின்சார கார்களுக்கு இந்த எல்எஃப்-30 கான்செப்ட் அடிப்படையாக அமையும்.


Click it and Unblock the Notifications








