முன்னாள் டிஜிபியின் அதிரடியால் அரசியல் கட்சிகள் கலக்கம்... தேர்தல் சமயத்தில் வைத்த ஆப்பு இதுதான்...
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், முன்னாள் டிஜிபி ஒருவர் அதிரடி காட்டி வருவதால், அரசியல் கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன.

இந்தியாவில் தேர்தல் திருவிழா களை கட்ட தொடங்கி விட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் ஐந்தாண்டு பதவிக்காலம் முடிவடைவதையடுத்து, இந்தியாவின் 17வது மக்களவை தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி வரும் ஏப்ரல் மாதம் 11ம் தேதி முதல் மே மாதம் 19ம் தேதி வரை மொத்தம் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் ஆணையம் அறிவித்தது. மே மாதம் 23ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

தமிழகம் (39) மற்றும் புதுச்சேரியில் (1) மொத்தம் 40 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இவை அனைத்திற்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தற்போது அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
தேர்தல் பிரச்சாரம் இன்னும் ஒரு சில நாட்களில் சூடுபிடிக்கவுள்ளது. தேர்தல் சமயங்களில், வாக்காளர்களை கவர ரோடு ஷோ (Roadshow) மற்றும் பைக் பேரணிகளை (Bike Rallies) நடத்துவது என்பது பல்வேறு அரசியல் கட்சிகளின் வழக்கமாக இருந்து வருகிறது.
ஆனால் தேர்தல் சமயங்களில், ரோடு ஷோ மற்றும் பைக் பேரணிகள் ஆகியவற்றுக்கு தடை விதிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தற்போது மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் டிஜிபியும் (DGP), சுற்றுச்சூழல் ஆர்வலருமான விக்ரம் சிங்தான் உச்சநீதிமன்றத்திடம் இந்த கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார். மற்றொரு சுற்றுச்சூழல் செயற்பாட்டாளரான சாய்விகா அகர்வாலுடன் இணைந்து அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
தேர்தல் சமயங்களில் நடைபெறும் ரோடு ஷோ மற்றும் பைக் பேரணிகளால் காற்று மற்றும் ஒலி மாசுபாடு ஏற்படுவதாக மனுதாரர்கள் தங்கள் மனுவில் கூறியுள்ளனர். அத்துடன் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கும் இது வழிவகுக்கிறது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படுகிறது எனவும், எனவே ரோடு ஷோ மற்றும் பைக் பேரணிகளை நடத்த தடை விதிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரும்பாலான ரோடு ஷோக்கள், பிரபலங்கள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதில், கிச்சன், ஹைட்ராலிக் லிஃப்ட், டிவி, இன்டர்நெட் என சொகுசான வசதிகள் செய்யப்படுகின்றன.
இத்தகைய வாகனங்களின் விலை மிகவும் அதிகம். இதன்மூலம் தேர்தல் ஆணையம் அனுமதித்ததை காட்டிலும் அதிகமாக செலவு செய்யப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ரோடு ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிகளின்போது, தீவிரவாத தாக்குதல்களால் விவிஐபிக்கள் பாதிக்கப்படக்கூடிய அபாயமும் உள்ளது. எனவே இவை அவர்களின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றன.

அரசியல் பேரணியின்போது நடந்த தீவிரவாத தாக்குதலால் இந்த நாடு ஏற்கனவே முன்னாள் பிரதமரை இழந்துள்ளது. இதேபோல் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர், அரசியல் ரோடு ஷோவின்போது படுகொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய பென்ச் முன்பு கடந்த திங்கள் கிழமை (மார்ச் 11) வலியுறுத்தப்பட்டது. எனினும் அவசர வழக்காக விசாரிக்க பென்ச் மறுத்து விட்டது.


Click it and Unblock the Notifications








