மஹிந்திரா ஸ்கார்ப்பியோ, எக்ஸ்யூவி500 கார்களில் புதிய டீசல் எஞ்சின்!
மஹிந்திரா ஸ்கார்ப்பியோ, எக்ஸ்யூவி500 உள்ளிட்ட எஸ்யூவி ரக கார்களில் புதிய டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

அடுத்த ஆண்டு பாரத் ஸ்டேஜ் -6 என்ற புதிய மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. இதற்கு தக்கவாறு, எஞ்சின்களை மேம்படுத்தவும், புதிய எஞ்சின்களை பயன்படுத்தவும் கார் நிறுவனங்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

அந்த வகையில், மஹிந்திரா நிறுவனம் தனது எஸ்யூவி கார்களில் பொருத்துவதற்கான புதிய டீசல் எஞ்சினை உருவாக்கி வருவதாக ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

மஹிந்திரா நிறுவனம் உருவாக்கி வரும் புதிய 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் கார் மாடலுக்கு தக்கவாறு வெவ்வேறு விதமான திறனை வெளிப்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

மஹிந்திரா நிறுவனத்தின் புதிய 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் அடிப்படையாக 140 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவியிலும் இந்த புதிய 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. எனவே, புதிய தலைமுறை தார் எஸ்யூவி தற்போதைய மாடலைவிடஅதிசக்திவாய்ந்த மாடலாக இருக்கும்.

இதே 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவியில் கூடுதல் சக்திவாய்ந்ததாக இடம்பெற இருக்கிறது. இந்த எஞ்சின் ஸ்கார்ப்பியோவில் 150 பிஎச்பி பவரை அளிக்க வல்லதாக இருக்கும்.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியிலும் இந்த எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, இந்த எஞ்சினை அதிகபட்சமாக 180 பிஎச்பி பவரை அளிக்கும் வகையில் மஹிந்திரா பயன்படுத்தும் என தெரிகிறது.

புதிய மாசு உமிழ்வு விதிகளுக்கு உட்பட்ட எஞ்சின் மற்றும் புதிய பாதுகாப்பு விதிமுறைகள் என அடுத்த ஓர் ஆண்டிற்குள் இந்தியாவில் விற்பனையாக இருக்கும் கார்கள் புதிய அத்யாயத்தில் நுழைய இருக்கின்றன.அதற்கு தக்கவாறு கார்களின் விலையும் கணிசமாக உயரும் என்று கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








