மஹிந்திரா கட்டுப்பாட்டில் செல்லும் ஃபோர்டு இந்தியா கார் நிறுவனம்!
ஃபோர்டு இந்தியா நிறுவனத்தில் பெரும்பான்மையான பங்கு முதலீடுகளை கையகப்படுதுகிறது மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம். இனி ஃபோர்டு இந்தியா கார் நிறுவனம் மஹிந்திரா கட்டுப்பாட்டில் செயல்பட இருக்கிறது.

ஃபோர்டு இந்தியா கார் நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை மஹிந்திரா கையகப்படுத்தி இருக்கிறது. ஃபோர்டு நிறுவனத்திற்கு 49 சதவீத பங்குகள் கைவசப்படுத்தியுள்ளன. எனினும், ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் கார் உற்பத்தி மற்றும் விற்பனை ஆகியவை மஹிந்திரா - ஃபோர்டு கூட்டணி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செல்ல இருக்கிறது.

மேலும், சென்னை மற்றும் குஜராத் மாநிலம் சனந்த் பகுதியில் அமைந்துள்ள இரண்டு காா் உற்பத்தி ஆலைகள் மஹிந்திரா - ஃபோர்டு கூட்டணி நிறுவனத்திடம் உரிமை மாற்றம் செய்யப்பட இருக்கிறது. அதேநேரத்தில், சனந்த் பகுதியில் செயல்படும் ஃபோர்டு கார் எஞ்சின் உற்பத்தி ஆலை ஃபோர்டு நிறுவனத்தின் நேரடி கட்டுப்பாட்டில் தொடர்ந்து செயல்படும்.

இந்த இரு நிறுவனங்களும் தங்களது டீலர்களில் இரு பிராண்டு கார்களையும் விற்பனை செய்யும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதாவது, மஹிந்திரா டீலர்களில் மஹிந்திரா கார்கள் மட்டுமின்றி, இனி ஃபோர்டு கார்களும், ஃபோர்டு டீலர்களில் ஃபோர்டு கார்களுடன் சேர்த்து மஹிந்திரா கார்களும் விற்பனை செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

மேலும், பொதுவான பிளாட்ஃபார்மை பயன்படுத்தி உருவாக்கப்படும் கார்கள் இரண்டு பிராண்டுகளில் விற்பனை செய்யப்படும். அதேபோன்று, மஹிந்திரா - ஃபோர்டு கூட்டணி நிறுவனம் தயாரிக்கும் கார்கள் வெளிநாடுகளிலும் விற்பனைக்கு செல்லும்.

அதேபோன்று, இங்கு உற்பத்தி செய்யப்படும் கார்கள் பல்வேறு வெளிநாடுகளுக்கும் தொடர்ந்து ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. ஃபோர்டு நிறுவனத்தின் மூலமாக பல்வேறு வெளிநாடுகளிலும் கார் விற்பனையை துவங்குவதற்கு மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. இரு நிறுவனங்களும் பரஸ்பரம் இந்த கூட்டணி மூலமாக பலன் பெறும். அடுத்த ஆண்டு மத்தியில் இந்த கூட்டணி நிறுவனம் செயல்பட துவங்கும்.

அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு கார் நிறுவனம் இந்தியாவில் எதிர்பார்த்த அளவு விற்பனை வளர்ச்சியை பதிவு செய்யவில்லை. இதையடுத்து, மஹிந்திரா நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து புதிய கார்கள் மற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்க முடிவு செய்தது. இதற்காக இரு நிறுவனங்களும் கடந்த 2017ம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டன. இந்த நிலையில், ஃபோர்டு இந்தியா நிறுவனம் நேரடி வர்த்தகத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டது.


Click it and Unblock the Notifications








