மஹிந்திரா- ஃபோர்டு கூட்டணியில் உருவாகும் புதிய எக்ஸ்யூவி500 எஸ்யூவி!
மஹிந்திரா- ஃபோர்டு கூட்டணியில் புதிய எஸ்யூவி மாடல் உருவாக்கப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த புத்தம் புதிய எஸ்யூவி குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

ஃபோர்டு மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் இந்திய சந்தையில் இணைந்து செயல்பட இருப்பது குறித்த செய்தி முன்பே அறிந்ததே. கடந்த 2017ம் ஆண்டு இரு நிறுவனங்களும் கூட்டணி அமைத்து ஒப்பந்தம் செய்து கொண்டன. மேலும், கார்களுக்கான தகவல் தொழில்நுட்ப மென்பொருள் மற்றும் எஞ்சின், கியர்பாக்ஸ் ஆகியவற்றை உருவாக்கும் முயற்சியில் இணைந்து செயல்பட இருப்பதாக இந்த கூட்டணி அறிவித்தது.

இதன்மூலமாக, முதலீடு வெகுவாக குறைக்க முடியும். வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க லாபத்தை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மஹிந்திரா - ஃபோர்டு கூட்டணி எஸ்யூவி காரை உருவாக்கி வருவதாக அரசல்புரசலாக இதுவரை செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன.

இந்த நிலையில், அந்த தகவல் உறுதியாகி இருக்கிறது. புதிய மிட்சைஸ் எஸ்யூவி மாடலை இணைந்து உருவாக்க இருப்பதாக மஹிந்திரா - ஃபோர்டு கூட்டணி இன்று அறிவித்துள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் வெற்றிகரமான பிளாட்ஃபார்மின் அடிப்படையில் இந்த புதிய எஸ்யூவி உருவாக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, இந்த புதிய எஸ்யூவி மாடலானது மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் புதிய தலைமுறை மாடலாக கருதப்படுகிறது. மேலும், இதே எஸ்யூவி ஃபோர்டு பிராண்டிலும் ரீபேட்ஜ் செய்து விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறதாம்.

இந்தியாவில் இரு பிராண்டுகளிலும் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. அதேபோன்று, இந்த எஸ்யூவியை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதற்கும் இரு நிறுவனங்களும் முடிவு செய்துள்ளன.

இதுதவிர்த்து, மின்சார கார் உருவாக்கப் பணிகள், கார் விற்பனை மற்றும் கார் தயாரிப்பு உள்ளிட்டவற்றில் இரு நிறுவனங்களும் இணைந்து செயல்படுவதற்கான விரிவானத் திட்டமும் உள்ளது. புதிய மஹிந்திரா கார்களுக்கான குறைவான சிசி திறன் கொண்ட பெட்ரோல் எஞ்சினை ஃபோர்டு நிறுவனம் சப்ளை செய்ய இருக்கிறது.

மொத்தத்தில் இரு நிறுவனங்களும் இந்திய சந்தையில் மிக நெருக்கமாக செயல்பட இருக்கின்றன. எதிர்காலத்தில் ஃபோர்டு நிறுவனத்தின் வர்த்தகம் முழுவதையும் மஹிந்திரா ஏற்றுக் கொள்ள இருப்பதாகவும் தகவல்்கள் கூறுகின்றன.
*Note: All images used are for representational purposes only


Click it and Unblock the Notifications








